கொரோனா வைரஸ் அலுவலகங்களில் பிங்கர்பிரிண்ட் வருகைப்பதிவு அதிரடி நிறுத்தம்..!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகப் பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் காய்ச்சலுக்கு 3700-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்தனர். இந்தியாவில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒருவருக்குக் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  கொரோனா வைரஸ் காய்ச்சல் தொடர்பாக மக்கள் அச்சப்படத் தேவையில்லை. முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும், அடிக்கடி கை கழுவுதல், இருமல், தும்மல் வந்தால் கைக்குட்டையை வைத்து வாயை மூடிக் கொள்ளுதல், ஒருமுறை பயன்படுத்தும் காகிதத்தை உபயோகப்படுத்துதல், உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் பள்ளிக்கு வராமல் இருப்பது பொது இடத்தில் கூடுவதைத் தவிர்த்தல் ஆகியவற்றை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை மார்ச் 31-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.