இறுதிக் கட்டத்தில் சிரியா யுத்தம்… அதிகரிக்கும் தாக்குதல்!

சிரியாவில் உள்நாட்டு யுத்தம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அங்கு நடத்தப்பட்டு வரும் தாக்குதல் அதிகரித்திருப்பதால் அதிகளவிலான பெண்களும், குழந்தைகளும் துருக்கிய எல்லைகளை நோக்கி வெளியேறி வருகின்றனர்.

சிரியாவின் சர்வாதிகாரி எனப்படும் அதிபர் பசார் அல்-அசாத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு இராணுவத்திற்கும் இடையிலான உள்நாட்டு யுத்தம் 9 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பொதுமக்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வழிவகுத்தது.

அல்-அசாத் தற்போது ரஷ்ய போர்விமானங்களின் உதவியுடன் கிளர்ச்சியாளர்களை இட்லிபிலிருந்து துடைக்க தனது இறுதி முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

கிளர்ச்சியாளர்களின் கடைசி கோட்டையாக இருந்து வரும் இட்லிப் மாகாணத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் விரைவில் அவர் தன்னுடைய வெற்றியினை அறிவிக்க முடியும்.

இதனால் அவர் நாட்டின் வடக்கில் இட்லிப்பில் குண்டுவீச்சு நடத்த உத்தரவிட்டுள்ளார்.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை வெளியேற்றுவதற்காக அவர் பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்களைப் பயன்படுத்தி வருகிறார்.

குறிப்பாக பெண் குழந்தைகளும் நகரத்தில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறி வடக்கு நோக்கி துருக்கிய எல்லையை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.

கடந்த பத்து வாரங்களில் கிட்டத்தட்ட 700,000 பொதுமக்கள் துருக்கிய எல்லையை நோக்கி தப்பி சென்றிருப்பதாக ஐநா அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

குண்டுவெடிப்புகள் தற்போது தீவிரமடைந்து வடமேற்கு நகரத்தை விட்டு வெளியேறும் சாலைகள் இன்னும் நெரிசலானதால், தப்பிச்செல்லும் பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக, உதவி செய்துவரும் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இந்த நிலையில் தீவிரமடையும் தாக்குதலுக்கு மத்தியில் முகத்தில் வெள்ளை தூசிகளுடனும், காயங்களுடனும் பெற்றோரை இழந்து நிற்கும் பிஞ்சுக்குழந்தைகளின் நெஞ்சை உருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

எல்லைக்கு அருகே சுமார் ஒரு மில்லியன் சிரிய அகதிகள் வாழ்கின்றனர், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் முகாம்கள் ஏற்கனவே நிறைந்துவிட்டன. இதனால் “மனிதாபிமான பேரழிவு” வரவிருப்பதாக ஐநா எச்சரித்துள்ளது.