ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், ஜோக்கோவிச், ஸிட்ஸிபாஸ், கோகோ காஃப் உள்ளிட்டோர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், ஜோக்கோவிச், ஸிட்ஸிபாஸ், கோகோ காஃப் உள்ளிட்டோர் அடுத்த சுற்று ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளனர். 

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் பலர் களமிறங்கியுள்ளனர். முதல் கட்ட ஆட்டங்களில், முக்கிய வீரர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இரண்டாவது சுற்று ஆட்டமொன்றில், செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் மற்றும் ஜப்பான் வீரர் டட்சுமா ஐடோ ஆகியோர் மோதினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6க்கு1, 6க்கு4, 6க்கு 2 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றிப்பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் கிரீஸ் வீரர் ஸ்டெஃபனோஸ் ஸிட்ஸிபாஸ் மற்றும் ஜெர்மன் வீரர் பிலிப் கோல்ஸ்ரெய்பர் ஆகியோர் மோத இருந்தனர். இதில் கோல்ஸ்ரெய்பர் காயம் காரணமாக வெளியேறியதால் ஸிட்ஸிபாஸ் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த 15 வயது வீராங்கனை கோகோ காஃப் மற்றும் ரோமானிய வீராங்கனை சொரானா சிஸ்டீ ஆகியோர் மோதினர். இதில் 4க்கு 6, 6க்கு 3, 7க்கு 5 என்ற செட் கணக்கில் கோகோ வெற்றி பெற்றார். அடுத்த சுற்றில் ஜப்பானின் நட்சத்திர வீராங்கனை நவோமி ஒசாக்காவை கோகோ எதிர்கொள்ள இருக்கிறார். தமது முதல் ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலேயே கோகோ அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.