சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அவர், சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகள், வசதிகள் மற்றும் பயணிகள் சேவை குறித்தும் பரிசீலித்தார்.
அத்துடன் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பயணிகளுடன் ஜனாதிபதி இதன்போது கலந்துரையாடியதாக தெரியவருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பல இடங்களுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டு வருகின்றார்.
அதற்கமைய , விசேட பொருளாதார மையம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உள்ளிட்ட பல இடங்களுக்கு அவர் இவ்வாறு திடீர் கண்காணிப்பு விஜயங்களை மேற்கொண்டிருந்தார்.
குறித்த விஜயங்களின் பின்னர் அங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் பல உத்தரவுகளும் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்தன.
அதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அண்மையில் திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட அவர், அங்கு வெளிநோயாளர் பிரிவைப் பார்வையிட்டதுடன், வைத்தியர்களை சந்தித்து மக்களின் நலன்கள் குறித்து கேட்டறிந்தோடு மக்களை சந்தித்து மக்களின் நலன்கள், தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதன்போது, நோயாளர்களின் சொந்த ஊரை கேட்டறிந்த ஜனாதிபதி, தூர பிரதேசங்களில் இருந்து வந்திருந்த நோயாளர்களிடம் அதற்கான காரணத்தையும் கேட்டறிந்துகொண்டதை அடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் சகல வசதிகளுடனும் கூடிய வைத்தியசாலைகள் அமைக்கப்படுமென அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.