மீண்டும் கிறிஸ் பூதங்களின் ஆட்டம் ஆரம்பம்?

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் ‘கிறிஸ் மனிதர்கள்’ அடாவடிகளில் ஈடுபட்டு, தமிழ் மக்களை அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

முகம் தெரியாதவாறு ‘கிறிஸ்’ மற்றும் கறுப்பு முகச் சாயத்தை பூசிக்கொண்டு நடமாடும் இவர்கள், வீடுகளில் கொள்ளையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சராசரியாக ஒரு நாளுக்கு ஒரு வீடு என்ற அடிப்படையில் திருக்கோவில் பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

ஆயுதங்களுடன் நடமாடும் இந்த மர்ம நபர்கள் தமிழ் மக்களை துப்பாக்கி முனையில் பயமுறுத்தித் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகினறது.

சில வருடங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கில் ‘கிறிஸ் மனிதர்கள்’ நடமாடி அச்சத்தை ஏற்படுத்திய சம்பவங்களை ஞாபகப்படுத்தும் மக்கள், அந்த அச்சுறுத்தலின் தொடர்ச்சியாகவே மர்ம மனிதர்கள் மேற்கொண்டுவரும் இந்த திருட்டுச் சம்பவங்களையும் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த மர்ம மனிதர்கள் யார் என்பதை பாதுகாப்புத்துறை கண்டுபிடித்து, இது போன்ற திருட்டுச் சம்பவங்களை தடுத்து நிறுத்தவேண்டும் என்று அப்பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மக்கள் மத்தியில், குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் பயப்பீதியை (Fear Psycho) ஏற்படுத்தும்படியான இந்தச் சம்பவங்களில் இருந்து கோட்டாபய தலைமையிலான இந்த புதிய அரசாங்கம் தமக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று தெரிவிக்கின்றார்கள் அப்பிரதேச வாழ் மக்கள்.