சாம்சங், எம்ஐ செல்போன் நிறுவனங்களுக்கு சில்லரை விற்பனையாள்கள் எச்சரிக்கை ….

நம் நாட்டில் நாளுக்கு நாள் ஆன்லைன் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் கிடைக்கும் அதிரடி தள்ளுபடிகள், அலைய வேண்டிய அவசியம் இல்லை, இருந்த இடத்தில் இருந்தபடியே ஒரு பொருளின் பல வகைகளை பார்த்து வாங்கலாம் போன்ற வசதிகள் இருப்பதை இதற்கு காரணம்.

ஆன்லைன் வர்த்தகத்தால் கடைக்காரர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக செல்போன் கடைக்காரர்களுக்கு ஆன்லைன் விற்பனை பெரிய வில்லனாக மாறி வருகிறது. கடைகளில் செல்போன்களை வாங்குவதை காட்டிலும் ஆன்லைனில் வாங்குவது பல சமயங்களில் வாடிக்கையாளர்களுக்கு லாபமாக உள்ளது.

ஆன்லைன் நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வழங்குவதே இதற்கு காரணம். ஆன்லைனில் தள்ளுபடி கொடுப்பதை செல்போன் நிறுவனங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் அதனை செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் காது கொடுத்து கேட்டதாக தெரியவில்லை. இந்நிலையில், ஆன்லைனில் செல்போன்களுக்கு தள்ளுபடி வழங்குவதை கட்டுப்படுத்த தவறினால், ஆன்லைன் விலைக்கே கடையில் செல்போனை குறைத்து விற்பனை செய்வோம்,

உங்களது தயாரிப்புகளை முற்றிலும் புறக்கணிப்போம் என ஜியோமி, சாம்சங் மற்றும் ஒன் ப்ளஸ் போன்ற பிராண்டட் செல்போன் நிறுவனங்களுக்கு சில்லரை செல்போன் நிறுவனங்களின் தேசிய அமைப்பான அனைத்து இந்திய மொபைல் சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.