சவுதியில் 7 வருடங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்த பெண்ணின் வழக்கில் ஒரு புதிய திருப்பம்..!!

சவுதியில் ஏழு வருடங்களுக்கு முன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட பெண் தற்போது உயிருடன் இருப்பதாக அவருடைய பெற்றோர் கூறியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி யாகப்பா – பவுலின் மார்த்தாள் தம்பதியின் மகள் இமாகுலேட் (27). இவரது கணவர் டேவிட் நடத்தி வந்த நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து, 2012ம் ஆண்டு கணினி ஆபரேட்டர் வேலைக்காக இமாகுலேட் சவுதிக்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சென்றதும் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் 2013ம் ஆண்டு மே 10ம் திகதியன்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக அழைப்பு வந்துள்ளது.

மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் அந்தோணி அளித்த மனுவின் பேரில், உடலை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில் அவருடைய உடல் 2014ம் ஆண்டு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அதன்பிறகு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன், 23 பெண்கள் சவுதியில் சிக்கி சித்ரவதைக்கு உள்ளாவதாக வீடியோ ஒன்று வெளியானது. அதில் தங்களுடைய மகள் இமாகுலேட் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளையும் மற்றவர்களையும் மீட்டு தருமாறு பிரதமருக்கும், வெளியுறவுத்துறைக்கும் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து அவருடைய பெற்றோர் கூறுகையில், திருச்சிக்கு வந்தபோதே அது எங்களுடைய மகளின் உடல் இல்லை என்று கூறினோம். ஆனால் பிரேத பரிசோதனையில் எங்களுடைய மகள் என்று கூறியதால் ஏற்றுக்கொண்டோம் என கூறியுள்ளனர்.`