ஒரு வாரத்தில் பதிலடி…! அமெரிக்காவை மிரட்டும் ஈரான்

தகுந்த பதிலடி கொடுப்பதற்காக அமெரிக்காவின் 35 இலக்குகளை அடையாளம் கண்டுள்ளதாக ஈரானிய அதிகாரி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் உயர்மட்ட இராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி அமெரிக்க ஆளில்லா விமானத்தின் மூலம் கொல்லப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஏற்கனவே ஈரான் உச்சந்தலைவர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், 35 இலக்குகளை அடையாளம் கண்டிருப்பதாக தெற்கு மாகாணமான கெர்மனில் காவலர்களின் தளபதி ஜெனரல் கோலமாலி அபுஹாம்சே அச்சுறுத்தலை எழுப்பியுள்ளார்.

இலக்குகளில் பாரசீக வளைகுடாவில் உள்ள அமெரிக்க கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் டெல் அவிவ் ஆகியவை அடங்கும்.

இப்பகுதியில் முக்கியமான அமெரிக்க இலக்குகள் ‘நீண்ட காலத்திற்கு முன்பே’ அடையாளம் காணப்பட்டதாக அபுஹாம்சே கூறியுள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி மேற்கு நாடுகளுக்கு ஒரு முக்கிய புள்ளியாக இருந்து வருகிறது. ஏராளமான அமெரிக்க வெடிகுண்டு கப்பல்களும், போர்க்கப்பல்களும் அங்கு கடந்து செல்கின்றன. இப்பகுதியில் சுமார் 35 அமெரிக்க இலக்குகள் மற்றும் டெல் அவிவ் ஆகியவை எங்களது எல்லைக்குள் உள்ளன,” என்று அவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

ஈரானில் இருந்து பதிலடி கொடுக்கும் தாக்குதலை உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ ‘வாரங்களுக்குள்’ காணலாம் என்று காங்கிரஸின் மூத்த ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் மோதலின் தீவிரத்தை குறைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பதிலடி எவ்வளவு மோசமாக இருக்கும். எங்கு, என்ன அடிக்கப் போகிறது என்பதுதான் ஒரே கேள்வி எனவும் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.