சம்மாந்துறை கமநல சேவைகள் திணைக்களத்தில் பணிபுரியும் தமிழ் பெண் மீது தாக்குதல்! முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை!

அம்பாறை – சம்மாந்துறை கமநல சேவைகள் திணைக்களத்தில் பணிபுரியும் தமிழ் பெண் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அரச உத்தியோகத்தர்கள் கடமை பொறுப்பேற்கும் நிகழ்வின்போது சம்மாந்துறை கமநல சேவை திணைக்களத்தில் பணிபுரியும் தமிழ் பெண் அரச ஊழியர் ஒருவரை அதே திணைக்களத்தில் விவசாய அபிவிருத்தி உத்தியோகிஸ்தராக பணியாற்றும் நபர் தாக்கியுள்ளார்.

இது குறித்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளபோதிலும் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைவர் நா.விஸ்னுகாந்தனின் கவனத்திற்கு கொண்டுசென்றதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாகவும், அதற்காக தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.