பற்றி எரியும் இந்தியா..! சிஏஏ-என்ஆர்சி-க்கு எதிரான போராட்டத்தில் 8 வயது சிறுவன் படுகொலை…

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவேட்டிற்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்ததில் 8 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி மாநிலத்தில் நிலவி வரும் வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீரட் மாவட்டத்தில் இருந்து நான்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் வாரணாசியில் ஒரு வன்முறைக் கும்பல் பொலிஸ் பணியாளர்களால் துரத்தப்பட்டபோது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

வெள்ளிக்கிழமை மாநிலத்தின் பல பகுதியில் போராட்டகாரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே நடந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

லக்னோ, கான்பூர், கோரக்பூர், மீரட் மற்றும் சம்பல் ஆகியவை சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைக் கருத்தில் கொண்டு அலிகார், மவு, அசாம்கர், லக்னோ, கான்பூர், பரேலி, ஷாஜகான்பூர், காஜியாபாத், புலந்த்ஷாஹர், சம்பல் மற்றும் அலகாபாத் ஆகிய இடங்களில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


படோஹி, பஹ்ரைச், அம்ரோஹா, ஃபாருகுகாபாத், காஜியாபாத், வாரணாசி, முசாபர்நகர், சஹரன்பூர், ஹப்பூர், ஹத்ராஸ், புலந்த்ஷாஹர், ஹமீர்பூர் மற்றும் மஹோபா மாவட்டங்களில் இருந்தும் காவல்துறையினருடன் கல் வீசுதல் அல்லது அதிக மோதல்கள் ஏற்பட்டன.

பல இடங்களில், பொலிசார் லத்திகள், கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தினர். இந்த வன்முறையில் காவல்துறை வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் தீக்கிரையானது. பல பொலிசாரும் இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.