தமிழ் தேசிய கட்சி உதயமாகியுள்ளமைக்கான காரணம் வெளியிட்ட : என்.ஸ்ரீகாந்தா

தமிழ் இனத்திற்கு உறுதியானதும், திடமான நிதானமாக அரசியல் தலைமை அவசியமென்ற காரணத்தினால், புதிய தமிழ் தேசிய கட்சி உதயமாகியுள்ளது என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ஒத்த கருத்துள்ள தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றாக பயணிக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் தேசியக் கட்சி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்,

தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகள் மழுங்கடிக்கப்பட்டு விடாமல் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதற்காகவும், எமது மக்கள் அனுபவித்த துன்பங்கள் இழப்புக்கள், அனைத்தையும் ஈடு செய்யும் நோக்கில் காத்திரமான அரசியல் தீர்வு வென்றெடுக்கப்பட வேண்டுமென்ற குறிக்கோளுடனும் தமிழ் தேசியக் கட்சி நிறுவப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாளாக இருக்குமென்ற நம்பிக்கை எமக்கு உண்டு. காலத்தின் கட்டாய தேவையை வரலாற்றுக் கடமையாக நினைத்து அதனை நிறைவேற்றியுள்ளோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்புக்களையும் விசுவாசமாகவும், நேர்மையாகவும், கட்டிக் காத்து நிறைவேற்றும் என்கின்ற எமது மக்களின் நம்பிக்கை மெல்ல மெல்ல சிதைக்கப்பட்டு இப்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து இனிமேலும், தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகள் தொடர்பில் ஆக்கபூர்வமாக எந்தவித நடவடிக்கையையும் எதிர்பார்க்க முடியாது என்கின்ற கசப்பான உண்மை கண்ணேதிரே நின்று கொண்டிருக்கின்றது.

தமிழ் இனத்திற்கு உறுதியான, திடமான நேர்மையான அதேநேரம், நிதானமான, அரசியல் தலைமை ஒன்று முன்வைக்கப்பட வேண்டுமென்ற நம்பிக்கையுடனும், அந்த நிலைப்பாட்டுடனும் தான் இந்தக் கட்சியை நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் நிறுவப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கு தாயகத்தை உள்ளடக்கிய மாநிலத்தில், ஓர் சுயாட்சி அரசினை, பூரண சுயாட்சி அரசினை நிறுவுவதற்கும், அதனைப் பேணிப் பாதுகாப்பதற்கும், மரபு வெளி தாயகத்திற்கு வெளியே இலங்கையில் உள்ள எஞ்சிய பகுதிகளில் வாழ்ந்துகொண்டிருக்கும், எமது மக்களின் அரசியல் தீர்வினை நிலைநாட்ட இந்த கட்சி நிறுவப்பட்டுள்ளது.

ஒத்த கருத்தும், நோக்கமும் கொண்ட சில தமிழ்க் கட்சிகளை அடையாளம் கண்டவர்களாக, அவர்களுடன், ஒன்றுபட்டு, ஒத்த அணியாக தமிழ் இனத்திற்கு இன்று தேவைப்படும், உறுதியான, அதேநேரம் நேர்மையான அரசியல் தலைமை ஒன்றினை உருவாக்கி, அதனை எமது மக்கள் முன் முன்வைக்க முடியும் என நம்புகின்றோம்.

முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சி மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான கட்சிகளுடன் ஓரணி திரண்டு, புதிய தலைமைத்துவத்தை தமிழ் மக்கள் முன்பாக நிரூபிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.