நீதிமன்ற வளாகத்திலே நீதிபதியின் மனைவிக்கு பாலியல் மிரட்டல் விடுத்த கொலைக்குற்றவாளி

கொலை குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, குற்றவாளி நீதிமன்ற வளாகத்திலே நீதிபதியின் மனைவிக்கு பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவைச் சேர்ந்த மருத்துவர் லினா பொலனோஸ் (38) மற்றும் அவரது வருங்கால கணவரான, பிரித்தானியாவை சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் பீல்ட் (49) ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் அவர்களுடைய வீட்டில் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், அங்கு கட்டிட வரவேற்பாளராக பணிபுரிந்து வந்த 33 வயதான பம்பூமிம் டீக்சீரா என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, லினாவும் தானும் ஒருமுறை அறையில் இருப்பதை பார்த்த ரிச்சர்ட் கோபத்தில் காதலியை குத்தி கொலை செய்தார். அதன்பிறகு என்னையும் கத்தியால் குத்தவந்தார். நான் தற்காப்பிற்காக அவரை தாக்கும்போது உயிர்போய்விட்டது என வாக்குமூலம் கொடுத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பம்பூமிம் வாக்குமூலத்தில் கூறிய அனைத்தும் பொய் என்பது தெரியவந்தது. அவர் நகை மற்றும் பணத்திற்காக தம்பதியினர் இருவரையும் கொடூரமாக கொலை செய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அவரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி, 13ம் திகதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனக்கூறினார்.

உடனே குற்றவாளி பம்பூமிம் நீதிபதியை நோக்கி, நான் எப்போதும் சிறையில் இருந்து வெளியில் வரக்கூடாது என வேண்டிக்கொள். வெளியில் வந்தால் உன் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, அங்கிருந்த இரண்டு பொலிஸார் குற்றவாளியை வெளியில் இழுத்து சென்றனர்.