லிந்துலையில் 5 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்டவரின் சடலம் தோண்டி எடுப்பு!

லிந்துலை நோனா தோட்ட பொது மயானத்தில் கடந்த ஜந்து மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட ஆணொருவரின் சடலம் விசாரணைக்காக இன்று (09) நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

சுகவீனம் காரணமாக காலமானார் என கூறப்பட்ட பிச்சை ஜெகநாதன் (63) என்பவரின் சடலம் கடந்த ஜுலை 24 ஆம் திகதி தோட்ட பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

எனினும், இவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாககூறி அவரின் மருமகன் நடராஜ் ரமேஸ் லிந்துலை பொலிஸில் முறைப்பாடு செய்ய முயற்சித்துள்ளார். எனினும், முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என கூறப்படுகின்றது.

இதனால் இது தொடர்பில் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து முறைப்பாட்டை முன்வைத்த மருமகன், மரணித்தவரின் குடும்பத்தினர் ஆகியோர் நுவரெலியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.

தான் மரணித்தால் அதற்கு தனது மனைவியே காரணம் என பிச்சை ஜெகநாதன் தன் கைபட எழுதிய கடிதமும் சிக்கியுள்ளது.

இந்நிலையிலேயே விசாரணைக்காக சடலம் தோண்டப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றுவருகின்றன.