சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பெண்கள்!

சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமியிடம், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சரண்யா என்கிற கலைச்செல்வி (29) என்ற பெண் நெருங்கி பழகினார்.

அதுமட்டுமின்றி அந்த சிறுமிக்கு கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்து ஆசைவார்த்தை கூறியும், மதுபோதை பழக்கத்தை ஏற்படுத்தியும், அவரை கடத்திச் சென்று திருப்பூரில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்.

இதையடுத்து அங்கிருந்து தப்பி வந்த அச்சிறுமி நடந்ததையெல்லாம் பெற்றோரிடம் எடுத்து கூறி கதறி அழுதார். இது தொடர்பாக கரூர் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் பின்னணியில் கலைச்செல்வியுடன் குமுதவல்லி (36), கல்பனா (32), சந்தனமாரி என்கிற சந்தியா (36), பிரதாப் (29), சிவகுமார் (36), மணி (36) ஆகியோர் ஈடுபட்டிருந்தது தெரியவந்த நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

2017ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து இவ்வழக்கின் விசாரணை கரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை முழுவதும் முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குமுதவல்லிக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதமும் மற்றும் சரண்யா, கல்பனா, மணி ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் அபராதமும், சிவக்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தனமாரி, பிரதாப் ஆகியோரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தும் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

இதோடு குற்றவாளிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராத தொகையை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.