அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: வடகொரியா

அமெரிக்காவுடன் இனி அர்த்தமற்ற பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்கா – வடகொரியத் தலைவர்கள் இடையே சந்திப்பு நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரிவித்தார். இதற்கு வடகொரியா தரப்பில் தற்போது பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று (திங்கட்கிழமை) வடகொரியா தரப்பில், “எங்களுக்கு அமெரிக்காவுடன் அர்த்தமற்ற பேச்சுவார்த்தை நடத்த எந்த ஆர்வமும் இல்லை. இதனால் எங்களுக்கு அமெரிக்காவிடம் திரும்ப ஏதும் கிடைக்கப்போவதில்லை” என்று தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

கடந்த பெப்ரவரியில், வியட்நாம் தலைநகரான ஹனோய் நகரில் ட்ரம்ப் மற்றும் கிம் ஆகியோருடைக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது சந்திப்பின்போது அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

இதில் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.