பாலுறவுப் புணர்ச்சி மூலமும் டெங்கு பரவும் அபாயம்.

வடக்கில் மழை காலம் தொடங்கியதைத் தொடர்ந்து டெங்கு நோய்த் தாக்கம் அபாய அளவை எட்டியிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் அறிவித்துள்ள நிலையில், பாலுறவுப் புணர்ச்சி மூலமும் டெங்கு பரவும் என்கிற அதிர்ச்சியூட்டும் தகவலை ஸ்பெய் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

கார்த்திகை (நவம்பர்) மாதத்தின் முதல் 10 நாள்களிலேயே யாழ். மாவட்டத்தில் 680 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவர் ரஜீவ் ஜி. மூர்த்தி தெரிவித்திருக்கிறார். யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரி அவர்.

ஐப்பசி (ஒக்டோபர்) மாதத்தில் 538 பேர் டெங்கு நோய◌ால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது யாழ். மாவட்டப் புள்ளிவிவரம். அதற்கு முந்திய மாதத்தில் 154ஆக இருந்த எண்ணிக்கை மழையைத் தொடர்ந்து சடுதியாக அதிகரித்துள்ளது.

‘‘இந்த அதிகரிப்பு எதிர்பார்க்கப்படாத ஒன்று. எச்சரிக்கையாக இருக்கவேண்டும்’’ என்று மருத்துவர் ரஜீவ் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் நல்லூர் மற்றும் கோப்பாய் பிரதேசங்களில் இருந்தே அதிகளவு எண்ணிக்கையான நோயாளர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அதன் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

டெங்கைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அரச தரப்பால் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வீடு வீடான சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

டெங்கு நுளம்பு பரவும் விதத்தில் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்தக் குற்றங்களுக்காக நீதிவான் மன்றங்கள் குடியிருப்பாளர்களுக்குத் தண்டம் விதிக்கின்றன.

இந்த நிலையில், ஸ்பெயினில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று பாலுறவு மூலமும் டெங்கு நோய் பரவும் என்கிற அதிர்ச்சியூட்டும் முடிவை அறிவித்திருக்கின்றது.

இதுவரையில் நுளம்புகளால் மட்டுமே டெங்கு பரவும் என்று உலகம் நம்பியிருந்தது.
ஆனால், ஆண் ஒருவருக்கு பாலுறவுப் புணர்ச்சி மூலம் டெங்கு தொற்றியிருக்கிறது என்பதை ஸ்பானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

ஸ்பெயின் தலைநகர் மட்றிட்டில் வசிக்கும் 41 வயதான ஆண் ஒருவருக்கு அவரது வாழ்க்கைத் துணையான ஆணிடமிருந்து புணர்ச்சி மூலம் டெங்கு தொற்றியுள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

கியூபா நாட்டுக்குச் சென்று நுளம்புக் கடியில் சிக்கியதன் மூலம் அந்த நபருக்கு டெங்குத் தொற்று ஏற்பட்டுள்ளது என்று மட்றிட் நகர பொதுச் சுகாதாரத் திணைக்கள அதிகாரி சுசானா ஜிமென்ஸ் தெரிவித்தார்.

வைத்தியசாலைக்கு வந்த நபருக்கு டெங்கு இருப்பது புரட்டாதி (செப்டெம்பர்) மாதமே உறுதியானது, ஆனால், அந்த நபர் டெங்கு காய்ச்சல் ஏற்படக்கூடிய எந்தவொரு நாட்டுக்கும் பயணமாகி இருக்கவில்லை என்பதால் அவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது மருத்துவர்களை ஆச்சரியப்படுத்தியது.

‘உண்மை என்னவென்றால், இவருக்கு ஏற்பட்ட நோய் அறிகுறிகளைப் போன்றே இவரது துணைக்கும் ஏற்பட்டுள்ளது, ஆனால் அது கடுமையானதாக இருக்கவில்லை. துணைவர் கியூபா மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகியவற்றுக்குச் சென்று வந்திருக்கிறார். அங்கு டெங்கு பெரியளவில் இருக்கின்றது’’ என்றார் சுசானா.

அவர்களுடைய விந்துகளை ஆய்வுக்குட்படுத்தியபோது ‘‘அதில் டெங்கு வைரஸ் காணப்பட்டது மட்டுமல்லாமல் கியூபாவில் காணப்படும் அதே கிருமியே இங்கும் கண்டுபிடிக்கப்பட்டது.’’

ஆண் பெண் புணர்வின் போதும் டெங்கு பரவுவது தொடர்பாகத் தென்கொரியாவில் அண்மையில் வெளியான மருத்துவ ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்ததை ஒத்ததாக இந்த விடயம் அமைந்திருந்ததாக சுசானா தெரிவித்தார்.

டெங்கு நோயால் ஆண்டொன்றுக்கு 10 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். 100 மில்லியன் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

சிறுவர்களை இந்த நோய் மிக மோசமாகத் தாக்குகிறது. அதிலும் குறிப்பாக சிறுமிகளிடம் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அது ஏன் என்பது அறிவியல◌ாளர்களுக்கு இதுவரையில் தெரியவில்லை.

அதிகூடிய காய்ச்சல், தலையிடி, சத்தி என்பன டெங்கு நோய்க்கான அறிகுறிகளில் முக்கியமானவை.