பூண்டு முட்டை குழம்பு எப்படி செய்வது?

முட்டையில் ஆம்லெட், முட்டை குழம்பு, முட்டை போண்டா என்று செய்து சுவைத்திருப்போம். ஆனால் இப்போது முட்டையுடன் பூண்டு கலந்து, சுவையான பூண்டு முட்டை குழம்பு எப்படி செய்வது? என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முட்டை – 6
தோல் நீக்கிய பூண்டு – 15 பல்
நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
நறுக்கிய தக்காளி – 2
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 3 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பூண்டு முட்டை குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் 5 முட்டையை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வேகவைத்து, உரித்து இரண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

பின்பு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் தோல் நீக்கிய பூண்டு போட்டு வதக்கவும்.

பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

நன்கு கொதி வந்ததும், மீதமுள்ள ஒரு முட்டையை உடைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.

பின்னர், அதனுடன் வெட்டி வைத்துள்ள வேக வைத்த முட்டைகளை சேர்த்து ஒரு கொதி வரும் வரை வேக விட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழைகளை தூவி இறக்கினால் சுவையான பூண்டு முட்டை குழம்பு ரெடி.