அரியலூர், சென்னை, தர்மபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம், திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெண் சிசுவதை இன்றைக்கும் தொடர்ந்து நடைபெற்று வருவதை தொண்டு நிறுவனங்களின் ஆய்வுகளிலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களில் இருந்தும் தெரியவருகின்றன.
இந்த 10 மாவட்டங்களில் பிறப்பு விகிதம் ஆண், பெண் 1000-க்கு 928 என்று கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருவதை ஏதோ கற்பனை கதை என்று ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. பெண்களுடைய பிறப்பு விகிதம் கூடுதலாகிவிட்டது அல்லது மொத்த மக்கள்தொகையில் பெண்கள் கூடுதலாக இருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரங்கள் மகிழ்ச்சி தரலாம். ஆனால் பெண்கள் வளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. பெண்களுக்கு அதிகாரம் கிடைத்துவிட்டது என்று கருதிவிட முடியாது. பெண் குழந்தைகளின் பிரச்சினைகள் தான் என்ன? ஆண் குழந்தைகளுக்கு நிகராக ஊட்டச்சத்து கிடைக்கப்பெறாமை, பெண் கல்வி அவசியம் என்கிற சூழல் புறநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் முழுமை பெறாத நிலை, பெண்களின் உயர்கல்விக்கு குடும்பம், உறவுகள் வரவேற்பும், ஆதரவும் தரும் நிலை வளராதது.
பெண்களை பாரமாக கருதி திருமணம் நடத்திவிட்டால் கடமை தீர்ந்தது என்று நினைக்கின்ற அதர பழசான சமூக சிந்தனை பெண்களுக்கு உள்ளது. ஆண்களுக்கு நிகரான ஊதியமும், பதவி உயர்வும் வழங்க மறுக்கும் ஆணாதிக்க மனப்பான்மை, பெண்களே பெண்களுடைய வளர்ச்சிக்கு எதிரிகளாக மாறுகின்ற மனப்பாங்கு நிலவுகிறது. அரசும், மக்களும் ஆண் குழந்தைகளுக்கு இணையாக பெண்களுக்கும் ஊட்டச்சத்து உணவு வழங்க வேண்டும். அடிப்படைக்கல்வி இலவசமாக வழங்கப்பட்டாலும் அனைத்து பெண்களும் இலவச கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். ஆண்களுக்கு இணையாக பெண்கள் பணிபுரியும் போது அவர்களுக்கு இணையான ஊதியம், பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்
பெண் குழந்தைகள் தொடர்பான சட்டங்களை செயல்படுத்த அதிகமான பெண் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட ஒரு புதிய காவல் பிரிவினை ஏற்படுத்தி அதன் செயல்பாடுகளை காவல் துறை தலைவரே நேரில் கண்காணித்தல். பெண் குழந்தைகள் மீதான தேவையற்ற பாலியல் வன்கொடுமைகள், தாக்குதல்கள், ஏளனப் பார்வைகள், பொது இடங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான சேட்டைகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய விஷயங்களாக மாற வேண்டும்.
நீதிமன்றங்களில் இந்த வழக்குகளை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கொண்டு வந்து முடிவு செய்ய வேண்டும். தவறான அல்லது விருப்பமில்லாத முறையில், புலனாய்வு மேற்கொண்டு தண்டனை வழங்க இயலாத அளவிற்கு சாட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் பொறுப்பற்ற அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து அந்த பரிந்துரை மீது அரசு ஆய்வு செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள் நிலை தான் சமுதாய வளர்ச்சியின் அளவு கோல். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. அரசும், பல்வேறு தொண்டு நிறுவனங்களும், சமுதாய நலன் காக்கும் பொதுமக்களும் இணைந்து தங்களுடைய பங்கை வழங்கும் போது நிச்சயமாக நேர்மறை மாறுதல்கள் நடைமுறைக்கு வரும். பல விஷயங்களில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு, பெண் குழந்தைகள் முன்னேற்றத்திலும் ஒரு வழிகாட்டியாக விளங்கும் என்று எதிர்பார்ப்போம்.
எஸ்.எஸ்.ஜவகர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி.