17 வயது பிரிவில் பளுதூக்கல் தேசிய சம்பியன் வீராங்கணைக்கு மீசாலை விக்னேஸ்வராவில் பாராட்டு!

தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற பளு தூக்கல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வெற்றிகொண்ட யா/மீசாலை விக்னேஸ்வர மகாவித்தியாலய வீராங்கனை ஜெயந்திரன் யாதவியை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இன்று (18) இடம்பெற்றது.

வித்தியாலய முதல்வர் சு.சிவானந்தன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

மீசாலை மேற்கு, கரும்பு மாவடி முருகன் ஆலய முன்றலிலிருந்து விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு மேலைத்தேய வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் இ.ராஜசீலன், சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சி உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் செல்வி.கி.பிரதீபா, தென்மராட்சி ஆசிரிய ஆலோசகர் ந.ஸ்ரீகாந்தா, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைக் கல்விப்பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளரும், பழைய மாணவர் சங்க செயலாளருமான க.ரஜனிகாந்தன்,
பளு தூக்கும் பயிற்றுவிப்பாளர் ஆர்.விஜயபாஸ்கர், விளையாட்டு உத்தியோகத்தர்களான சி.சதுர்சன், கே.கஜேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது, தங்கப் பதக்கத்தை வென்ற வீராங்கனை ஜெ.யாதவி மாலை அணிவித்து வெற்றிக் கேடயம் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மேலும், பழைய மாணவர் சங்கத்தின் விசேட கெளரவிப்பு நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

வீராங்கனை ஜெ.யாதவி அண்மையில் பொலநறுவை றோயல் கல்லூரியில் இடம்பெற்ற 17 வயதின் கீழ் 45 கிலோ எடைப்பிரிவில், 82 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதங்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.