கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது திடீர் நீக்கம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது அதிரடி நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், சர்ஃபராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் அந்த அணி கடும் விமர்சனத்திற்கும், கிண்டலுக்கும் ஆளானது.

அதன் பின்னரும் அணியின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாகவும், சர்ஃபராஸ் அகமதுவின் தலைமை சரியில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்நாட்டு கிரிக்கெட் அணி மேலாளர் வாசிம் கான், அணியின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தார்.

அப்போது கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது நீக்கப்படுவார் என்று விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான தொடர்களில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்ஃபராஸ் அகமதுவே செயல்பட்டார்.

ஒருநாள் தொடரை வென்ற பாகிஸ்தான், டி20 தொடரை 0-3 என முழுமையாக இழந்தது. இதனால் சர்ஃபராஸ் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது திடீரென நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அசார் அலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் டி20 அணிக்கு இளம் வீரர் பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார். அசார் அலி 73 டெஸ்ட் போட்டிகளில் 5,669 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 15 சதங்கள் மற்றும் 31 அரைசதங்கள் அடங்கும்.