சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சிறையில் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி விசேஷ சலுகைகள் அளிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா திடீர் சோதனை நடத்தி விதி மீறல்களை கண்டுபிடித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உணமை தான் என அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அத்துடன் சசிகலாவுக்காக சிறையில் சமையல் செய்யப்பட்டதும் உண்மை தான் என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சசிகலா நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கர்நாடக அரசுக்கு சிறைத்துறை நிர்வாகம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்து மாணிக்கம், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோரை நேரில் சந்தித்து கடிதம் ஒன்று கொடுத்தார்.
சசிகலா அளவுக்கு மீறி சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு துஷ்பிரயோகம் செய்துள்ளார். ஆகையால் சசிகலா நன்னடத்தை அடிப்படையில் வெளியே விடக்கூடாது. மேலும் சம்மந்தப்பட்ட சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ், சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் துணை கண்காணிப்பாளர் அனிதா ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.







