20 அடி பள்ளத்தில் சிக்கிய லாரி! பொதுமக்கள் அச்சம்!

மயிலாடுதுறை 15.10.19 : மயிலாடுதுறையில் அவசரகதியில், தரமற்ற முறையில் சீரமைக்கப்பட்ட பாதாளசாக்கடை பள்ளத்தில், கனரக வாகனம் உள்வாங்கியது அந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கு அச்சத்தினை உண்டாக்கியுள்ளது. உயிர்பலி ஏற்படும் முன்பு நிரந்தரமாக சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாக, இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வந்தவண்ணம் உள்ளது.
கடந்த ஒன்றரை வருடமாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் பாதாளசாக்கடை குழாய்களில் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் 20 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்படைவது தொடர்கதையாகி உள்ளது.

இந்நிலையில், திருவாரூர் சாலை கண்ணாரத்தெருவில் கடந்த மாதம் பாதாளசாக்கடை குழாயால் சாலை உள்வாங்கி 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. நகரின் பிரதான சாலையில் ஏற்பட்ட இந்த பள்ளத்தை நகராட்சி நிர்வாகத்தினர் அவசர கதியில் சரிசெய்து, போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால், சீரமைப்புப் பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஜல்லி ஏற்றிக்கொண்டு அந்த வழியே சென்ற லாரி அதே இடத்தில் மீண்டும் சிக்கி கொண்டது. இதனால் அந்த பாதையில் மீண்டும் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடையால் தொடர்ந்து சாலையில் பள்ளம் ஏற்படுவதைத் தடுக்க, இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.