இதுவரை தீர்க்கப்படாத தமிழர்களின் அனைத்து பிரச்சனைகளிற்கும் 2 வருடத்திற்குள் தீர்வு: யாழில் நாமல் உத்தரவாதம்!

மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் 2 வருடங்களுக்குள் தீர்த்து வைப்போம் எனக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எங்களைப் பொறுத்தவரை வடக்கு தெற்கு என்ற பிரிவினை கிடையாது. நாங்கள் எல்லோரும் இலங்கையைச் சார்ந்த மக்கள் அரசியலுக்காக இனங்களைப் பிரிக்கமுடியாது என தெரிவித்தார்.

ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் ஏற்பாட்டில் பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கல்லூரி மண்டபத்தில் இன்று மாலை இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகயைும் இரண்டு வருடங்களுக்குள் தீர்த்து வைப்போம். குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வு, அபிவிருத்தி வேலைகள், வேலைவாய்ப்புக்கள், அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை, காணி விடுவிப்பு போன்றவற்றை நாங்கள் தீர்த்து வைப்போம்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த நாங்கள் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் வகையில் பிரதான வீதிகளை செப்பனிட்டு வடக்கையும் தெற்கையும் இணைத்து உறவுப்பாலத்தை அமைத்தோம். வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து பல்வேறு வகையான அபிவிருத்திகளை மேற்கொண்டிருந்தோம். பாடசாலைகள் வைத்தியசாலைகள் பொதுநோக்கு மண்டபங்கள் போன்றவற்றை கட்டினோம். சமூர்த்தித் திட்ட்த்தில் பலரை உள்வாங்கினோம். இது மட்டுமன்றி இலங்கை பொலிஸ் சேவைக்கு தமிழ் இளைஞர் யுவதிகளை உள்வாங்கி அவர்களுக்கு பல்வேறு பதவிகளிலும் அமர்த்தினோம்.

இன்று எந்தப் பொலிஸ் நிலையம் சென்றாலும் தமிழ் பொலிஸார் இருப்பதை காணலாம். இவ்வாறாக பல வேலைத்திட்டங்களை செய்திருந்தபோதும் 2015 ஆம் ஜனாதிபதித் தேர்தலில் எங்களை விட இன்றுள்ள அரசாங்கம் இன்னும் வேலைத்திட்டங்களைச் செய்வார்கள் என்று நம்பி இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தார்கள். எனினும் இங்கு எந்த வேலைத்திட்டங்களோ அபிவிருத்திகளோ இடம்பெறவில்லை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை பட்டதாரி ஒருவர் சந்தித்தார். அவர் எனக்கு ஒரு வேலைவாய்ப்பு வேண்டும் என்று கூறியிருந்தார் அதற்கு சம்பந்தன் எங்களுக்கு இனப்பிரச்சினைக்குத் தீர்வுதான் தேவை. அது கிடைக்கும் வரையில் வேலைகள் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது எனக்கூறியுள்ளார். இது தான் அவர்களின் நிலைமையாகவுள்ளது. இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் அரசாங்கத்துடன் இருந்தே செயற்பாட்டார்கள். ஆனால் வடக்கு மக்களுக்கு எத்தகைய செயற்றிட்டங்களையும் செய்து கொடுக்கவில்லை.

மகிந்தராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருந்த போது வடக்கு மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் வேலைவாய்ப்புத் திட்டங்களையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி செய்து கொடுத்தார். இந்த அரசாங்கம் எத்தகைய வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. நாடுபூராவும் பொருளாதார ரீதியில் எத்தகைய வளர்ச்சியையும் அடையவில்லை. வடக்கை பொறுத்தவரை வடக்கிலுள்ள அனைத்து மக்களும் கடனாளிகளாகவே ஆகியுள்ளார்கள்.

இதனால் பொருளாதார ரீதியான முன்னேற்றங்கள் எதுவும் இன்றி பாதிக்கப்பட்டுள்ளார்கள். குடும்பங்களுக்குள் பிள்ளைகளுக்குள் பிரச்சினைகளே அதிகரித்துள்ளது. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லாத நிலை ஏற்படுகின்றது. குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இவ்வாறாக பல பிரச்சினைகள் இன்று ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் ஒருமித்து செயற்படுவதன் மூலம் தான் வடக்கை தெற்கை பிரிக்காது ஒருமித்த அபிவிருத்தியை நோக்கி பயணிக்க முடியும். எங்களுக்கு இனங்களை பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றாகவே பயணிக்க விரும்புகின்றோம். எங்களால் முடியும் என்பதை முடியும் என்றே கூறுவோம். முடியாது என்றால் முடியாது என்றே கூறுவோம்.

எனவே சுயலாப அரசியலுக்கு எடுபடாது ஒன்றிணைந்து செயற்படவேண்டும் வடக்கை முழுமையான அபிவிருத்தி செய்வோம் யாழ்.நகரை அபிவிருத்தி நோக்கிய நகரமாக மாற்றுவோம் என்றார்