நடந்தவற்றை தமிழர்கள் மறக்க வேண்டியதில்லை. ஆனால் ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச.
த இந்து ஆங்கில நாளிதழிற்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இந்தியா அல்லது வேறு எந்த நாடும் பின்னணியில் இருந்தன என்பதற்கு தனிப்பட்ட முறையில் என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், அப்போது என்ன தவறுகளை விட்டோம் என்பதை, இப்போது நாங்கள் நன்றாக புரிந்து கொண்டோம். முன்னர்க எங்கள் அரசாங்கத்தை மாற்ற அவர்கள் செயற்பட்டிருந்தால், இப்போது நிலைமையை சரிசெய்துள்ளோம் என்றார்.
“இந்தியா எங்கள் முதலிட நண்பர் மற்றும் அண்டை நாடு, எனவே அரசியல் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் நெருங்கி செயற்பட வேண்டும். ஆனால் பொருளாதார மற்றும் பிற விஷயங்களில் நீங்கள் சீனாவை மறக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
இலங்கையில் சுமார் 15.99 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். கடைடந்த தேர்தலை போலவே சுமார் 80% வாக்களிப்பு வீதம் பதிவானால், அது சுமார் 12 மில்லியன் செல்லுபடியாகும் வாக்குகளாக இருக்கும். எங்கள் இலக்கு அதில் 6.5 மில்லியன் வாக்குகள் என பசில் தெரிவித்துள்ளார்.
தேசிய மட்ட தேர்தலில் இந்த இலக்கை அடைவதற்கு சிறுபான்மையினரின் ஆதரவு மிக முக்கியமானது என்றும் பசில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் “என்ன நடந்தது என்பதை மறக்க முடியாது. ஆனால் இரு சமூகத்தினரும் ஒருவருரையொருவர் மன்னிக்க வேண்டும்“ என்றும் தெரிவித்துள்ளார்.
தமது ஆட்சியில் அதிகாரப்பகிர்வின் மூலம் தேசிய பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார். எனினும், புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியமா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்கட்டும் என்றார்.