துருக்கியின் ராணுவ நடவடிக்கையை எதிர்த்து சிரியாவுக்கு ஆதரவளித்த இந்தியாவுக்கு அந்நாடு நன்றி! .

துருக்கியின் ராணுவ நடவடிக்கையை எதிர்த்து சிரியாவுக்கு ஆதரவளித்த இந்தியாவுக்கு அந்நாடு நன்றி தெரிவித்துள்ளது.

சிரியா -துருக்கி எல்லையில் உள்ள குர்து படையினர் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்த தனது படைகளை அமெரிக்கா வாபஸ் பெற்றது.

இதனைத் தொடர்ந்து 5-வது நாளாக சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்

சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படையினருக்கு எதிராக துருக்கி மேற்கொண்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கையால் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என்றும் சிரிய மக்களிடையே துயர நிலையை ஏற்படும் என்றும் இந்தியா ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தது.

இந்நிலையில் சிரியாவுக்கு ஆதரவு அளித்ததற்காக இந்தியாவுக்கு அந்நாடு நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிரியாவுக்கான இந்தியத் தூதர் அப்பாஸ் கூறும்போது, “சிரியாவுக்கு எப்போதும் இந்தியா ஆதரவளித்துள்ளது. இந்தியா கல்வி ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் சிரியாவுக்கு பல உதவிகளைச் செய்துள்ளது. சர்வதேச அரங்கில் வலுவான குரலைக் கொண்ட இந்தியா, வலுவான அரசாங்கத்தைக் கொண்டதாகவே நாங்கள் பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 5-வது நாளாக துருக்கி ராணுவம் சிரியாவின் வடக்குப் பகுதியில் தங்கள் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.