இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் சூடினார் நடிகர் தனுஷ்!

தனுஷின் அசுரன் படத்தில் இளைய சூப்பர் ஸ்டார் என பட்டப்பெயர் வழங்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணி மீண்டும் அசுரன் படம் மூலம் இணைந்துள்ளது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் அசுரன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் டைட்டில் கார்டில் தனுஷிற்கு இளைய சூப்பர் ஸ்டார் என்று பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக இணையத்தில் வீடியோக்கள் வெளியாகின. ஆனால் உண்மையில் தனுஷுக்கு அப்படி எந்த பட்டமும் குறிப்பிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

முன்னதாக அசுரன் படத்துக்குப் பேனர் வைக்க வேண்டாம் என்று அகில இந்திய தனுஷ் தலைமை நற்பணி மன்றம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தனுஷ் பெயருக்கு முன்பாக இளைய சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு இருந்தது கவனிக்கத்தக்கது.