செவில்லா அணியை வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவுசெய்தது ரியல் மெட்ரிட் அணி…!!

ஸ்பெயினில் நடைபெற்றுவரும் கழக கால்பந்து அணிகளுக்கிடையிலான லா லிகா கால்பந்து தொடர், தற்போது விறுவிப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் தற்போது ஐந்தாவது வார போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் உள்ளூர் நேரப்படி இன்று நடைபெற்ற போட்டியொன்றில், ரியல் மெட்ரிட் அணியும், செவில்லா அணியும் பலப்பரீட்சை நடத்தின.

ரமோன் சான்செஸ் பிஸ்ஜுன் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், ரியல் மெட்ரிட் அணி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் ஆரம்பம் முதலே இரண்டு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் ஆக்ரோஷமாக விளையாடின. இதனால் முற்பாதியில் இரண்டு அணிகளால் முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முற்பாதி கோல் எதுவுமின்றி சமநிலைக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில், இரண்டு அணிகளும் அதே ஆக்ரோஷ பாணியை தொடர்ந்தன. போட்டியின் 64ஆவது நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கரீம் பென்ஸிமா, அணிக்காக முதல் கோலை புகுத்தி இரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து, செவில்லா அணி பதில் கோல் போடுவதற்கு கடுமையாக போராடியது. எனினும் அந்த அணியால் கோல் போட முடியவில்லை. இதனால் போட்டியின் இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில், ரியல் மெட்ரிட் அணி வெற்றிபெற்றது. இது நடப்பு தொடரில் ரியல் மெட்ரிட் அணியின் மூன்றாவது வெற்றியாகும். புள்ளிபட்டியலில் ரியல் மெட்ரிட் அணி 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தோல்வியடைந்த செவில்லா அணி, 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.