இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 2வது டி20 போட்டி இன்று பஞ்சாப் மாநில மொகாலி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இரு அணிகளுக்கிடையேயான தொடரின் முதல் 20 ஓவர் போட்டியானது கடந்த 15ம் தேதி இமாச்சல் பிரதேசம் தர்மசாலாவில் நடைபெற நடைபெற இருந்தது. ஆனால் கனமழை பெய்ததன் காரணமாக அந்த போட்டியானது டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் இரண்டு போட்டி மட்டுமே இருக்கிறது.. இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையில் களமிறங்கும் அணியில் யார் யாரெல்லாம் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பேட்டிங்கை பொருத்தவரையில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பாண்ட் இடம்பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ராகுல் வெளியில் உட்கார வைக்கபடலாம் என தெரிகிறது.
ஆனால் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் அதிகப்படியான ஆப்ஷன்கள் இருப்பதால் யாரை தேர்வு செய்வது யாரை விடுவது என்ற நிலை தற்போது நீடிக்கிறது. ஆல்ரவுண்டர்களாக பாண்டிய சகோதரர்கள் இடம்பெறுவார்கள். கூடவே ரவீந்திர ஜடேஜா இருப்பார். மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக இடம்பெறப் போவது வாஷிங்டன் சுந்தர் அல்லது ராகுல் சாகர் என்ற நிலை எழுந்துள்ளது.
அதேபோல வேகப்பந்து வீச்சாளர்களாக இறங்கப் போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் பாண்டிய மற்றும் சாஹர் சகோதரர்கள் நால்வரும் அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு களமிறக்கப்பட்டால் ஒரே அணியில் இரண்டு அண்ணன் தம்பிகள் விளையாடுவது இந்திய அணியில் இதுவே முதல் முறையாக இருக்கும்.
இன்று களமிறங்க வாய்ப்பு உள்ள அணி : ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (C), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (WK), ஹார்டிக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் / ராகுல் சாஹர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி







