சச்சினின் வாழ்வில் மறக்க முடியாத நாள்!

ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர், டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் என்ற பட்டியலில் முன்னணியில் இருப்பவர் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் போட்டிகளில் விரைவிலேயே தன்னுடைய முதல் சதத்தை அடித்து விட்ட சச்சின் டெண்டுல்கர், ஒட்டுமொத்தமாக தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 51 சதங்களுடன் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்தார்.

ஒரு நாள் போட்டியிலும் அதிக சதங்கள் அடித்த பட்டியலில் 49 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய முதல் சதத்தை அடிப்பதற்கு மட்டும் அவர் எடுத்துக் கொண்ட ஆட்டங்கள் 78 என்றால் நம்பமுடியாது தான். ஏனெனில் அவர் அணியில் சேர்க்கப்பட்ட பொழுது அவர் ஆறாவது ஏழாவது இடங்களில் மட்டுமே பேட் செய்ய அனுமதிக்கப் பட்டார்.

அப்போது தொடக்க ஆட்டக்காரர் நிலையில் விளையாட மூத்த வீரர்கள் இருந்ததால் போதிய வாய்ப்பு கிடைக்காத சச்சின் டெண்டுல்கர், ஸ்ரீலங்காவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தன்னுடைய முதல் ஒருநாள் சதத்தை அடித்தார். செப்டம்பர் 9 1994 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் ஒருநாள் சதத்தை அடித்திருந்தார். அவர் தன்னுடைய முதல் ஒருநாள் சதத்தை அடித்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1989 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர் ஐந்து வருடம் ஐந்து வருடம் கழித்து தான் தன்னுடைய முதல் ஒருநாள் சதத்தை அடித்தார் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. அவர் சதமடித்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, சச்சினின் கன்னி சதத்தில் 50 ஓவர்களில் மொத்தம் 246/8 ரன்கள் எடுத்தது. மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் 50 ரன்களைத் தாண்டவில்லை. மனோஜ் பிரபாகர் 3/34 என்ற சிறபபின பவுலிங் போட, ராஜேஷ் சவுகானும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஆஸ்திரேலியா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது. சச்சின் டெண்டுல்கருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நாளை நினைவு படுத்தும் விதமாக BCCI சார்பில் ட்விட்டரில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களும் பழைய ஞாபகங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..