வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்?

கடந்த செவ்வாய்க்கிழமை ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து மிரட்டல் விடுத்த மர்ம நபரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் போன் நம்பர் உள்ளிட்டவற்றை வைத்து அந்த நபரை போலீசார் தேடினர். பின்னர் அது சாய்ராம் என்பவருடையது என தெரியவந்தது.

இதனையடுத்து, ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையும் நடத்தினர். மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் நம்பரை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் பின்னர் சசிகாந்த் என்பவரை கைது செய்து அவரிடம் காவல்துறையினர் விசாரிக்கும்போது அவர் கூறிய காரணம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து சசிகாந்த் கூறுகையில், ‘நான் வேலை இல்லாமல் இருக்கிறேன். ஆனால், என் நண்பனான சாய்ராம் மேற்கொண்டு படிக்க கனடா செல்ல தயாராகிவிட்டான். அவன் செவ்வாய்க்கிழமை கனடா செல்வதாக இருந்தான். அதனால்தான் விமான நிலையத்தை தகர்த்தபோவதாக மிரட்டல் விடுத்தேன். மேலும், இதற்கு முன்பாக சாய்ராம் குறித்து தவறான தகவல்களை தூதரகத்துக்கும் அனுப்பியுள்ளேன்’ என சசிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து காவல்துறை சசியை கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு சசியை காண வந்த சாய்ராம், அவருக்கு 500 ரூபாய் கொடுத்துவிட்டு மேல்படிப்புக்காக கனடாவிற்கு சென்றுவிட்டார்.