`எனது சகோதரியை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார்’- இளம்பெண் தற்கொலையில் சகோதரர் வாக்குமூலம்

பாட்னாவைச் சேர்ந்த இளம்பெண் தனது காதலருடன் ஏற்பட்ட சண்டையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்

ஹரியானாவில் உள்ள ஹோட்டலில் இளம்பெண் ஒருவர் ஆகஸ்ட் 28-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்தப்பெண்ணுடன் ஹோட்டல் அறையில் ஒரு ஆணும் தங்கியிருந்தார்.

இருவரும் திங்கள்கிழமையன்று அறை எடுத்து தங்கினர். புதன்கிழமை இருவருக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது. அதன்பின் அந்த நபர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தனர்.

ஹோட்டல் அறையிலிருந்து தற்கொலைக்கான காரணமாக தொடர்பாக எந்தக் கடிதமும் இல்லை.

அறையில் அந்தப்பெண்ணுடன் தங்கியிருந்த நபர் ஹோட்டல் ஊழியர்களுக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார். நீண்ட நேரமாக போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. ஹோட்டலிலிருந்து கிளம்பிவிட்டாரா அல்லது அறையில் இருக்கிறாரா எனக் கேட்டுள்ளார்.

ஊழியர்கள் அந்தப்பெண் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரின் விசாரணையில் அந்தப் பெண் பாட்னாவைச் சேர்ந்தவர் என்றதும் வேலைதேடி இங்கு வந்ததையும் அவரது சகோதரர் மூலம் தெரிந்துகொண்டனர்.

சகோதரரிடம் நடத்திய விசாரணையில், “எனது சகோதரி பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். மார்க்கெட்டிங் பிரிவில் மேலாளராகப் பணியாற்றும் காசியாபாத்தைச் சேர்ந்த ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அலுவல் தொடர்பாக மீட்டிங்கில் பங்கேற்கும்போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.

பேசிப் பழகிய சில நாள்களில் தனது காதலை அந்த நபர் தெரிவித்துள்ளார். இருவரும் ஒன்றாகப் பழகிவந்தனர். அப்போது தான் அந்த நபருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை இருக்கும் விஷயம் எனது தங்கைக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு இருந்தது. ஆனால், திருமணம் செய்துகொள்கிறேன் எனப் பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து நம்பவைத்துள்ளார்.

எனது சகோதரி எங்கள் வீட்டிலிருந்து 25-ம் தேதி வெளியேறினார். குருகிராமில் வேலைக்கான இன்டர்வியூவில் பங்கேற்கச் செல்வதாகக் கூறிச் சென்றார்” என அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.