மகனை எப்படியாவது காப்பற்றிவிடு..! கொல்லப்பட்ட கணவரின் கடைசி வார்த்தை!

கண்முன்னே கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட பிரித்தானியர், கடைசி நேரத்தில் மகனை எப்படியாவது காப்பாற்றிவிடு என மனைவியிடம் கூறியுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த 34 வயதான அமித்பால் சிங் பஜாஜ் தாய்லாந்திற்கு தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு இரவு ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளார். அப்போது பக்கத்து அறையில் இருந்த நார்வேயை சேர்ந்த 53 வயதான ரோஜர் புல்மேன் என்பவர் போதையில், சத்தமாக பாடல் பாடிக்கொண்டிருந்துள்ளார்.

இதனால் இரவில் உறங்க முடியாமல் தவித்த அமித்பால் இரண்டுமுறை புல்மேனை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். ஆனால் உடல் வலுவான ராணுவ பின்னணி கொண்ட புல்மேன், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் பாடல் பாட ஆரம்பித்துள்ளார்.

இதனையடுத்து கோபமடைந்த அமித்பால் கையில் கத்தியுடன் அவருடைய அறைக்கு சென்று எச்சரித்துள்ளார். உடனே இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அமித்பால் கையில் வைத்திருந்த கத்தியால், புல்மேன் தோள்பட்டையில் குத்தியுள்ளார்.

வலிதாங்க முடியாத புல்மேன், அமித்பாலின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அவருடைய பிடியிலிருந்து மீள முடியாத அமித்பால் மனைவியின் கண்முன்னே துடிதுடித்து இறந்துள்ளார்.

இதனையடுத்து புல்மேனை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, வேண்டுமென்றே அமித்பாலை கொலை செய்யவில்லை என கூறியுள்ளார். அதன்பிறகு 10,750 பவுண்ட் பத்திரத்தில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமித்பாலின் மனைவி பந்துனா கவுர் (34), அந்த மனிதன் அடித்து உதைத்து குத்திக்கொண்டிருந்த போது, ‘குழந்தையை எடுத்துக்கொண்டு இங்கிருந்து தப்பி ஓடிவிடு’ என என்னுடைய கணவர் கத்தினார். ‘தயவு செய்து இங்கிருந்து போ, மகனை எப்படியாவது காப்பாற்றிவிடு’ என கூறியதாக தெரிவித்துள்ளார்.