31 வருடங்கள் மகனுக்காக தவமிருந்த பெற்றோர்…

இத்தாலிய கார் விபத்தில் சிக்கி 31 வருடங்களாக கோமாவில் இருந்த மகன் நேற்று உயிரிழந்ததால், நம்பிக்கையுடன் காத்திருந்த அவருடைய பெற்றோர் பெரும் சோகமடைந்துள்ளனர்.

இத்தாலியை சேர்ந்த இக்னாசியோ என்கிற 22 வயது இளைஞர் மார்ச் 19, 1988ம் ஆண்டு தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார்.

அப்போது நடந்த கோர விபத்தில் இக்னாசியோவின் மூளைப்பகுதியில் இரத்தக்கசிவு ஏற்பட்ட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாக கோமா நிலைக்கு சென்றுள்ளார். அவன் காரில் இருந்த நண்பர்களில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்ற இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர்.

இரண்டு ஆண்டுகளாக மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தும்கூட, இக்னாசியோவின் உடல்நிலையில் முன்னேற்றம் எற்படாததால், அவர் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என மருத்துவர்கள் கூறியும் கூட, மனம் தளராத அவருடைய பெற்றோர் தங்களுடைய மகன் ஒரு நாள் விழித்தெழுவான் என நம்பிக்கையுடன் கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் 54 வயதான இக்னாசியோ, இதயக்கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து அவருடைய தாய் மரினா கூறுகையில், 31 ஆண்டுகளாக நாங்கள் வெளி உலகிற்கு தொடர்பு இல்லாமல் வாழ்ந்தோம்.

“அவர் எழுந்திருக்க மாட்டார் என்று மருத்துவர்கள் எங்களிடம் கூறியிருந்தார்கள். ஆனால் நாங்கள் அவரை ஒவ்வொரு நாளும் கவனித்துக்கொண்டோம். ஒருவேளை அவர் எழுந்திருக்கலாம் என்கிற நம்பிக்கையில்…” என கூறியுள்ளார்.

ஜப்பானை பூர்விகமாக கொண்ட அவருடைய 77 வயதான தந்தை ஹெக்டர் கூறுகையில், ‘இப்போது வாழ்க்கை மாறிவிட்டது. நான் இன்று அதிகாலை 5 மணிக்கு எழுந்தேன். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. தோட்டத்தில் பூக்களுக்கு தண்ணீர் ஊற்ற சென்றுவிட்டேன்.

கடந்த இரவுகள் நான் இக்னாசியோவின் அறையில் தூங்கினேன். இப்போது அவர் போய்விட்டாலும், அவர் இருந்த இடத்திற்கு அருகே உறங்குகிறேன்.

நான் ஒருவார காலமாக மெக்சிகோ சென்றுவிட்டு வீடு திரும்பிய போது என் மகன் கிட்டத்தட்ட பச்சை நிறமாக காணப்பட்டார். அவர் கைவிடப்படப்போவதை நான் அப்போதே புரிந்துகொண்டேன்.

எனது மகனைப் பார்த்துக் கொள்வதற்காக 1990 ல் வேலையை விட்டுவிட்டேன். குடும்பத்தை ஆதரிப்பதற்காக மெரினா பணிபுரிந்து வந்தார்.

சில நேரங்களில் இக்னாசியோவிற்கு கண்ணீர் வரும், அவருக்கு நினைவு வந்துவிட்டதா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நான் அவரிடம்: ‘இக்னாசியோ, அழாதே, நீ தைரியமாக இருக்க வேண்டும்’ எனக்கூறுவேன் என்று தெரிவித்துள்ளார்.