விழித்து கொண்ட தினகரன்!! அமமுகவில் விழும் அடுத்த விக்கெட்?

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனால் அமமுகவிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வேறுகட்சிகளில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் அமமுகவிலிருந்து வெளியேறியது அரசியலில் தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இதனால் கட்சியை பலப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் தினகரனின் உத்தரவின் பேரில் அமமுகவிற்க்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. மேலும் அமமுகவை கட்சியாக பதிவு செய்த பின்னரே தேர்தலில் போட்டியிடுவது என்று தினகரன் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தனது குடும்ப நிகழ்ச்சிக்கு திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகளை அழைத்து விருந்து கொடுத்து சிறப்பாக கவனித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் திமுக அல்லது அதிமுக கட்சிக்கு விரைவில் சென்று விடுவார் என தினகரன் தரப்பு நினைத்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு பின் தினகரன் பழனியப்பனை அழைத்து பேசியதாகவும். இதற்கு பழனியப்பன் தரப்பு விளக்கம் கொடுத்ததாகவும் அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

என்னதான் பழனியப்பன் தரப்பு விளக்கம் கொடுத்தாலும், தினகரன் தரப்பில் இருந்து பழனியப்பனை கண்காணிக்கும் படி கூறியுள்ளதாக கூறுகின்றனர். அமமுகவிலிருந்து அடிமட்ட தொண்டர்கள் முதல் மேல்மட்ட நிர்வாகிகள் வரை மாற்று கட்சிக்கு செல்வதால் அடுத்த தேர்தலுக்குள் பெரும்பாலான நிர்வாகிகளை கட்சி கட்டுப்பாட்டுக்குள் வைக்க தினகரன் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.