லண்டனில் திருமாவளவனுக்கு நடந்தது என்ன?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்ட லண்டன் கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டு கலவரம் நடந்ததாக காணொளி ஒன்று பரவி வருகிறது.

கலை, இலக்கிய, திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பு செய்த ஏற்பாட்டில், தொல் திருமாளவனுடன் இரண்டு நாள் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட திருமாவளவன், அவருடைய அமைப்பாய் திரள்வோம் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வும், அதனை தொடர்ந்து கலந்துரையாடலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்ச்சி தொடங்கும் போதே குழப்பம் ஏற்பட்டதாகவும், அதனை தொடர்ந்து கைகலப்பு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. மேலும் அங்கே கூடியிருந்தவர்களிடம் நிதியுதவி கேட்டதாகவும், அப்போது அங்கே குழுமியிருந்த ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் பணம் தானே? எடுத்துக்கொள் என்று வீசி எரிந்து கடுமையாக நடந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் பிறகு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆனால் இதன்பிறகு நடைபெற்றது தான் அங்கு வந்திருந்தவர்களுக்கு சுவாரசியமானதாக இருந்திருக்கும். ஏனெனில் அங்கு பேசிய திருமாவளவன் தெரிவித்த தகவல்கள் அப்படியானவை. அவர் பேசியதில் சில வரிகள், “2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து ‘எல்லோரும் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் அதிகப்படியான குண்டுகளைப் போடுகிறார்கள்.. நீங்கள் ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா’ எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத் தெரிவித்தார். ‘நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தியுங்கள்’. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம் சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்” என திருமாவளவன் பேசியுள்ளார்.

திருமாவளவன் பேசியது, உண்மையா? பொய்யா என்ற விவாதம் ஒருபுறம் பொய் கொண்டிருக்கிறது. மறுபுறம் அப்படி விடுதலைபுலிகளின் கோரிக்கையின் படி தான் விசிக கூட்டணியில் இணைந்தது என்றால், அதனால் போரில் ஏற்பட்ட தாக்கம் என்ன? திமுக காங்கிரஸ் விசிக கூட்டணியின் வெற்றியின் முடிவில் விடுதலைப்புலிகள் முழுமையாக கொல்லப்பட்டது தான் நடைபெற்றது. மேலே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பு செய்தியும், கீழே கருணாநிதி தன் குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கேட்டு சென்றதும் ஒரே நாள் என்பதற்கான சாட்சியாக இன்னும் பழைய நாளிதழ்கள் இருக்கின்றன.

இந்த நிகழ்ச்சி தொடங்கும் முன் அங்கே இருந்த தமிழர்கள், திருமாவளவன் பேசிய போது அங்கே இருந்து இருந்தால் விஷயமே வேறு மாதிரி ஆகியிருக்கும் என்கிறார்கள் அங்கிருந்தவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக விடுதலைப்புலிகள் சொல்லித்தான் விசிக கூட்டணி வைத்ததா? என்றால் இல்லவே இல்லை என்கிறார்கள் அவருடன் பயணித்த தோழர்கள். 2009 தேர்தலுக்கு முன்னரே சிங்கப்பூர் சென்றிருந்த திருமாவளவன் அங்கிருந்தவர்களிடம் நிச்சயமாக திமுக காங்கிரஸ் கூட்டணி தான் என்று தெரிவித்துள்ளார். ஆக அவர் முன்கூட்டியே முடிவு எடுத்துவிட்டு தான் கூட்டணியே அமைத்துள்ளார். ஆனால் லண்டன் சென்று ஈழ தமிழர்களிடம், விடுதலைப்புலிகள் சொல்லித்தான் விசிக கூட்டணி வைத்ததாக சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஒருவேளை அவர்கள் வீசியெறிந்ததாக கூறப்படும் பணம் தானோ? என்று பலவாறு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.