இடிந்து விழும் நிலையில் புகழ்பெற்ற தேவாலயம்!

பாரீஸ் நகரில் அமைந்துள்ள, புகழ்பெற்ற 850 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நாட்ரிடாம் தேவாலயம் முற்றிலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இத்தகவலை கலாசாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தீக்கிறையான நாட்ரி டாம் தேவாலயம் தீவிபத்துக்குப் பிறகு, அண்மையில் வீசிய அனல் காற்று காரணமாக நாட்ரி டாம் தேவாலயத்தின் மேலும் சில கல்கள் விழுந்துள்ளதால் அந்த தேவாலயம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அங்கு சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அந்த அமைச்சகம் தெரிவித்ததுள்ளது.

அதுமட்டுமின்றி கடந்த ஏப்ரல் மாதம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 12-ஆவது நூற்றாண்டில் மரச் சட்டங்களை பெருமளவில் பயன்படுத்திக் கட்டப்பட்ட தேவாலய மேற்கூரையின் பெரும் பகுதி எரிந்து நாசமானது.

மேலும், அந்த தேவாலயத்துக்கு கம்பீரத்தை அளித்து வந்த கூம்பு வடிவ கோபுரமும் தேவாலயத்தின் உள்பகுதி, மேற்சுவர், ஜன்னல்கள் மற்றும் ஏராளமான கலைப் படைப்புகளும் சேதமடைந்தன.

இந்த நிலையில், கலாசாரத் துறை அமைச்சகம் தேவாலயக் கட்டமைப்பில் ஈயம் பெருமளவு பயன்படுத்தப்பட்டிருந்ததால், தீவிபத்து காரணமாக ஏற்பட்டுள்ள ஈய மாசுபாட்டை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, அந்தப் பணிகள் முடியும்வரை சீரமைப்புப் பணிகள் நிறுத்தப்படுவதாக கடந்த மாதம் 25-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.