தாலிக் கட்டிக் கொண்ட இரண்டாம் நாள் விதவையாகும் ஆயிரக்கணக்கானோர்..

இரு மனங்கள் இணைவதே திருமணம் என்பது பெரியோர்கள் வாக்கு. நம்மை பொறுத்தவரையில் இப்போது காதல் திருமணங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அதே வேகத்தில் திருமண முறிவும் நடக்கின்றன.

இப்படி ஒருவகையில் திருமணங்கள் முறிவதென்றால், திருமணமான மறுநாளே விதவை கோலம் ஏற்பது எவ்வளவு கொடுமை. அதிலும் ஆயிரக்கணக்கானோருக்கு இந்த நிலை ஏற்பட்டால்..? பொறுங்கள்… நம்ம ஊரில் இப்படி ஒரு நிகழ்வு … அது பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

இப்படி வருடம் ஒருமுறை நிகழ்வது ஒரு கோயிலில். அதுவும் தமிழகத்தில் உள்ள விழுப்புரம் அருகிலுள்ள கோயில் ஒன்றில் இந்த நிகழ்வு நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் இந்த திருவிழா கோலாகலமாக நிகழ்ந்தேறுகிறது. அரவான் என்னும் கடவுளை நினைத்து இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

திருநங்கைகள் தங்களுக்கென மட்டும் கொண்டாடும் ஒரு விழாவாக இந்த விழா நடந்தேறுகிறது. இந்த கோயிலின் பெயர் கூத்தாண்டவர் கோயில். வருடாவருடம் சித்திரை பவுர்ணமி தினத்தன்று திருநங்கைகளுக்கென இந்த விழா நடைபெறுகிறது.

இந்தியாவிலுள்ள திருநங்கைகள் மத்தியில் புகழ் பெற்ற புண்ணியத்தலமாக விளங்கக் கூடியது கூத்தாண்டவர் கோயில். விழுப்புரம் மாவட்டம் மடப்புரம் சந்திப்பிலிருந்து 30.கி.மீ தூரத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளுக்கான தனி தெய்வமாகிய கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதுமிருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் வெளிநாட்டு பயணிகளும் இந்த விழாவில் கலந்து கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த கோயிலுக்கு விழாவின் போது ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் திருநங்கைகள் மற்றும் அவர்களுடன் வருவோர் ஆவர்.

கடவுளாகிய அரவானை கணவனாக கருதி அனைத்து திருநங்கைகளும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்கின்றனர். சித்திரா பௌர்ணமியன்று கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக நினைத்துக் கொண்டு கோயில் அர்ச்சகர் கையால் திருநங்கைகள் அனைவரும் தாலி கட்டிக் கொள்கின்றனர்.

இரவு முழுவதும் தங்களது கணவனான அரவானை வாழ்த்திப் பொங்கல் வைத்து கும்மியடித்து ஆட்டமும் பாட்டமுமாக மகிழ்ச்சியாயிருக்கின்றனர்.

பொழுது விடிந்ததும் அரவானின் இரவு களியாட்டம் முடிவடைகிறது. நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் மரத்தால் ஆன அரவான் சிற்பம் வைக்கப்பட்டு, கூத்தாண்டவர் கோயிலிலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ள கொலைக் களமான அமுதகளம் கொண்டு செல்லப்படுகிறான்.

வடக்கே உயிர் விடப்போகும் அரவானைப் பார்த்து திருநங்கைகள் ஒப்பாரி வைக்கின்றனர். அமுதகளத்தில் அரவான் தலை இறக்கப்படுகின்றது.

திருநங்கைகள் அனைவரும் முதல்நாள் தாங்கள் கட்டிக்கொண்ட தாலி அறுத்து, பூ எடுத்து, வளையல் உடைத்து பின் வெள்ளைப் புடவை உடுத்தி விதவை கோலம் பூணுகின்றனர்.

விதவை கோலத்துக்கென விழா எடுத்து வெள்ளை புடவை கட்டி வந்து ஒப்பாரி வைக்கின்றனர் திருநங்கைகள்.

மகாபாரத போரில் அரவான் களப்பலி கொடுப்பதை நினைவுபடுத்தும் வகையில், சித்திரை பெருவிழாவின் போது கூவாகம் சுற்று வட்ட கிராம மக்கள் 18 நாட்களுக்கு சுப நிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்து விடுகிறார்கள்.

நடைதிறப்பு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இருக்கும்.

கூத்தாண்டவர் கோயில் இருக்கும் கூவாகம் கிராமம், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையிலிருந்து ஏறக்குறைய 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.