இடது கையில் ஸ்டியரிங்க்; வலது கையில் செல்போன்! – வீடியோ

இடது கையில் ஸ்டியரிங்கைப் பிடித்துக்கொண்டும் வலது கையில் செல்போனில் வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டும் பேருந்தை இயக்கி, பயணிகளின் உயிருடன் விளையாடிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு ஆலங்குடி வழியாக அரசுப் பேருந்து ஒன்று சென்றது. இந்தப் பேருந்தை ஆலங்குடியைச் சேர்ந்த மூக்கையா என்ற ஓட்டுநர் இயக்கினார்.

பேருந்து ஆலங்குடியைத் தாண்டிச் சென்றதும், மூக்கையா, இடது கையில் ஸ்டியரிங்கைப் பிடித்தவாறு தனது வலது கையில் செல்போனை எடுத்து அதில் வாட்ஸ் அப் பார்த்துக்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், ஓட்டுநரின் அலட்சியப் போக்கைக் கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அரசுப் பேருந்து ஓட்டுநர்

செல்போனை வைத்துவிட்டு, சாலையைப் பார்த்து ஓட்டுங்கள் என்று பயணிகள் ஓட்டுநரிடம் கோரிக்கை வைத்தும் அதை, அவர் காதிலேயே வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

சுமார் 10 கி.மீ வரையிலும் செல்போன் பார்த்தபடியே ஓட்டுநர் பேருந்தை இயக்கி உள்ளதாகப் பயணிகள் கூறுகின்றனர்.

ஒருவர் இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் உலாவ விட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் தற்போது தீயாகப் பரவி வருகிறது.

வீடியோ ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவின் பேரில் புதுக்கோட்டை மண்டலத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் மூக்கையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். புதுக்கோட்டை போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் ஆறுமுகம் அறிவிப்பை வெளியிட்டார்.

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் கூறும்போது, “பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஓட்டுநர்கள் பணி நேரத்தில் கண்டிப்பாக, செல்போன் பயன்படுத்தக் கூடாது. இதை மீறும் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற  நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க,  பேருந்து ஓட்டுநர்களுக்கு உரிய அறிவுரைகளைத் தொடர்புடைய அலுவலர்கள் வழங்கிடவும் பணிகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்” என்றார்.