படையெடுக்கும் 10 லட்சம் சுற்றுலா பயணிகள்! 800 பேர் வசிக்கும் கிராமத்திற்கு.

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியவில் உள்ளது ஹால்ஸ்டட் என்ற அழகிய கிராமம். மொத்தம் 800 பேர் மட்டுமே வசிக்கும் இந்த கிராமம் நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமாக இருக்கிறது. ஆண்டுக்கு சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்து செல்வதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இங்கு சுற்றுலா பயணிகளின வரத்து அதிகரித்திருக்கிறது. குறிப்பாக சீனாவில் இருந்து ஹால்ஸ்டட் வருவோரின் எண்ணிக்கை அதிகம்.

மனதை கொள்ளை கொள்ளும் உப்பு ஏரி, ஆல்பைன் வீடுகள், பளிங்கு அருவி, மலையை குடைந்து சுமார் 2 கிலோ மீட்டருக்கு இருவழியாக அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கப்பாதை உள்ளிட்டவை இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மீண்டும் மீண்டும் வருவதற்கு தூண்டுகின்றன.

இதுகுறித்த ஹால்ஸ்டட் கிராமத்தின் மேயர் அலெக்சான்டர் சூட்ஸ் கூறுகையில், ‘சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இதனால் எங்களுக்கு பயன் என்று பார்த்தீர்களானால் பொருளாதார முன்னேற்றம் கிடைக்கிறது. மக்கள் வந்து செல்கிற இடமாக இது இருக்கிறது. ஹால்ஸ்டட் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்’ என்று கூறினார்.

உள்ளூர் மக்கள் கூறுகையில், ‘சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். அவர்கள் கிராமத்தை பாழாக்கி விட்டு செல்கின்றனர். இது உள்ளூர் மக்களுக்கு நல்லது அல்ல’ என்று தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் வரத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஹால்ஸ்டட் நிர்வாகம் இறங்கியுள்ளது.