தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை எந்த சூழ்நிலையில் பயன்படுத்தினேன்- பிரித்வி சா விளக்கம்

கிரிக்கெட்டே எனது வாழ்க்கை இந்தியாவிற்காக விளையாடுவதை விட கௌரவமான விடயம் வேறெதுவும் இல்லை என தெரிவித்துள்ள பிரித்வி சா நான் உறுதியானவனாகவும் வலுவானவனகாவும் மீண்டும் திரும்புவேன் எனவும் குறிப்பி;ட்டுள்ளார்.

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியமைக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையினால் 8 மாத தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மார்ச் 16 ம் திகதி முதல் இந்த தடை நடைமுறைக்கு வருகின்றது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது

நவம்பர் 2019 வரை என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது என்பது எனக்கு தெரியவந்துள்ளது என பிரித்வி சா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரவரி 2019 இல் இந்தோரில் இடம்பெற்ற சையத்முஸ்டாக் அலி தொடரின் போது நான் கடும் இருமல் ஜலதோசத்தினால் பாதிக்கப்பட்டேன் , இதன் காரணமாக நான் பயன்படுத்திய இருமல் மருந்தில் தடைசெய்யப்பட்ட பொருள் காணப்பட்டதாலேயே எனக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நான் அவுஸ்திரேலியா தொடரில் காலில் ஏற்பட்ட காயத்திற்கு பின்னர் மீண்டும் கிரிக்கெட் விளையாடும் ஆர்வத்திலிருந்ததன் காரணமாக நான் எச்சரிக்கையாகயிருக்கவில்லை என பிரித்வி சா தெரிவித்துள்ளார்.

நான் எனது தலைவிதியை நேர்மையுடன் ஏற்றுக்கொண்டுள்ளேன்.கடந்த தொடரில் ஏற்பட்ட காயத்தினால் ஏற்பட்ட பாதிப்பு இன்னமும் மாறாத நிலையில் இந்த செய்தி எனக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நான் இதனை பதட்டப்படாமல் உள்வாங்கவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் இது இந்திய விளையாட்டு உலகிலுள்ள ஏனையவர்களிற்கு உந்துசக்தியாக அமையும் எனஎதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறிய நோய்க்கு மருந்து எடுக்கும் போது விளையாட்டு வீரர்களான நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் நான் உரிய விதிமுறைகளை எப்போதும் பயன்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டே எனது வாழ்க்கை இந்தியாவிற்காக விளையாடுவதை விட கௌரவமான விடயம் வேறெதுவும் இல்லை என தெரிவித்துள்ள பிரித்வி சா நான் மீண்டும் வேகமாகவும் வலுவானவனாகவும் திரும்பி வருவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.