இறுதிச்சடங்கிற்கு சென்றுவிட்டு திரும்பிய 65 பேர் சுட்டுக்கொலை.!!

நைஜீரியா நாட்டில் இறுதிச்சடங்கு நிகழ்விற்கு சென்றுவிட்டு திரும்பிய 65 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ பிராந்தியத்தில் இறுதிச்சடங்கினை முடித்துவிட்டு திரும்பிய ஒரு குழு மீது, கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்திற்குரிய இஸ்லாமியவாதிகள் சில துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் குறைந்தது 65 பேர் இறந்ததாக அரசு தொலைக்காட்சி ஞாயிற்றுக்கிழமையன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்களில் ஒன்றாகும்.

இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் போகோ ஹராம் குழு மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.டபிள்யூ.ஏ) பிளவு குழு ஆகியவை இப்பகுதியில் அடிக்கடி தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இதுகுறித்து மாநில தொலைக்காட்சியில் பேசிய உள்ளூர் தலைவர் முகமது புலாமா, இறுதி சடங்கில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த போது 21 பேர் தான் முதலில் கொல்லப்பட்டனர். உடனடியாக ஒருங்கிணைந்து தங்களை காத்துக்கொள்ள முயன்ற 44 பேர் அடுத்தபடியாக கொல்லப்பட்டனர்.

இதில் படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி முகம்மது புஹாரி தாக்குதலைக் கண்டித்து, குற்றவாளிகளை உடனடியாக பிடிக்குமாறு இராணுவத்திற்கு உத்தரவிட்டார் என்று ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.