கடைசி ஓவரில் நடந்த திருப்பம்….

இலங்கை மூத்த நட்சத்திர பந்து வீச்சாளரான லசித் மலிங்கா, வங்க தேச அணிக்கு எதிரான தனது கடைசி ஓவரில் விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார்.

இலங்கை அணியின் முன்னனி வேகப்பந்துவீச்சாளரான மலிங்கா, கொழும்பில் நடந்த வங்கதேச அணிக்கு அணிக்கு எதிரான போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

2004 ஆம் ஆண்டு முதல் இலங்கை அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடிய மலிங்கா 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

315 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் மலிங்கா வீழ்த்தினார். தொடர்ந்து 42வது ஓவரை வீசிய மலிங்கா அந்த ஓவரின் நான்காம் பந்தில் வங்கதேச அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

தன் கடைசி போட்டியில் 9.4 ஓவர்கள் வீசி 38 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார் மலிங்கா. இதில் இரண்டு மெய்டன் ஓவர்களும் அடங்கும்.

226 ஒரு நாள் போட்டிகளில் 338 விக்கெட்கள் வீழ்த்திய மலிங்கா, ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்திய சுழல் ஜம்பவான் அனில் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி, ஒன்பதாவது இடம் பிடித்துள்ளார். அனில் கும்ப்ளே 337 ஒருநாள் போட்டி விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.