இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்.. சபதம் போட்ட இந்திய வீரர்

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்படாததால் ஏமாற்றமடைந்த இந்திய வீரர் சுப்மான் கில், இதைப் பற்றி சிந்திக்க நேரத்தை செலவிடப் போவதில்லை என கூறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பணயத்திற்கான இந்திய அணியை அறிவித்த தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே பிரசாத், நியூசிலாந்து தொடரிலிருந்து கே.எல்.ராகுல் விலகியதால் சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது, ராகுல் அணிக்கு திரும்பி உள்ளதால், கில் காத்திருக்க வேண்டும். எதிர்காலத்தில் அவர் பரிசீலிக்கப்படுவார் என தெரிவித்தார்.

சமீபத்தில் பேட்டியளித்த 19 வயதான இளம் வீரர் சுப்மான் கில் கூறியதாவது, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய சீனியர் அணி அறிவிப்பிற்காக நான் காத்திருந்தேன், ஒரு பிரிவிலாவது தேர்வாகுவேன் என நினைத்தேன்.

ஒரு பிரிவில் கூட இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. இதைப் பற்றி சிந்திக்க நேரத்தை செலவிடப் போவதில்லை. நான் தொடர்ந்து ஓட்டங்களை குவித்து, சிறப்பாக விளையாடி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்ப்பேன் என கில் கூறியுள்ளார்.

மேலும், எனது முதல் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திலிருந்து நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம், போட்டி நிலையைப் பொறுத்து எனது இயற்கையான விளையாட்டைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகும்.

நல்ல பந்துகளைத் தடுப்பதும், முடிந்தவரை களத்தில் இருப்பதும் முக்கியம். களத்தில் நிற்கும் நபர் கடினமான காலகட்டத்தில் பேட்டிங் செய்ய வேண்டும், என்று கில் கூறினார்.