உலகக்கோப்பையில் திடீர் தெரிவு..

உலகக்கோப்பை தொடரில் இளம் வீரர் மயங்க் அகர்வால் திடீரென தெரிவு செய்யப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஏன் கழற்றிவிடப்பட்டார் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நேற்றைய தினம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் மயங்க் அகர்வால், ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை.

இது பலருக்கும் ஆச்சரியத்தையும், கேள்வியையும் எழுப்பியுள்ளது. ஏனென்றால், உலகக்கோப்பை தொடரில் விஜய் ஷங்கர் காயமடைந்தபோது, மாற்று வீரராக யாரும் எதிர்பார்க்காத நிலையில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டார்.

ஆனால், ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகாத அவர் எப்படி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் விளையாடுவார் என்ற கேள்வி அப்போது முன்வைக்கப்பட்டது. எனினும், அவர் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை.

டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவர் விளையாடியிருக்கும் நிலையில் தான், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். ஆனால், ஒருநாள் அணியில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இதுதான் தற்போது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

இதுதொடர்பாக தேர்வுக் குழு தலைவர் கூறியபோது, உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரர் ராகுல் பீல்டிங் செய்யும்போது காயமடைந்து இருந்தார். அதனால் முன்னேற்பாடாக மாற்று வீரராக மயங்க் அகர்வாலை அணியில் சேர்த்தோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது ஒருநாள் அணியில் அவரை ஏன் சேர்க்கவில்லை என்று அவர் கூறவில்லை.