தமிழ்தேசிய பற்றாளன் மாறன் என அழைக்கப்படும் திருநாவுக்கரசு சிவமாறன் அவர்கள் இன்று சாவடைந்துள்ளார்.
சிவமாறன் அவர்கள் புங்குடுதீவு மண்ணில் பிறந்து கிளிநொச்சி மண்ணில் அத்திவாரம் இட்டு தமிழ்தேசிய உணர்வோடும் தமிழ்த்தேசப் பற்றோடும் செயற்பட்டவர்.
சிவமாறன் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் கடற்கலங்களின் கட்டளைத்தளபதியாக இருந்து வீரமரணம் அடைந்த லெப்டினன் கேணல் இராணிமைந்தனின் சகோதரன் ஆவார்.
மாற்று வலுவுடையவராக இருந்தபோதிலும் தன்னினம் அடக்கு முறையிலிருந்தும், ஒடுக்கு முறையிலிருந்தும் விடுபட வேண்டும் என்பதற்காக ஒரு சமூகப் போராளியாக, ஒரு ஜனநாயக போராளியாக கிளிநொச்சி மண்ணில் தனது இறுதிக் கணம் வரை வாழ்ந்த ஒரு விடுதலை வேட்கை கொண்ட மனிதனாவார்.
இவருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி கிளை, தமிழ்தேசியப் பற்றாளர் என்கின்ற கௌரவத்தினை வழங்கியுள்ளது.
இவர் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தொழிற்சங்கங்களின் இணைப்பாளராக செயற்பட்டதுடன், தீவகக்கோட்டத்தின் மாவீரர் செயற்குழுவை நிறுவி அதனூடாக மாவீரர் நாள் நிகழ்வுகளை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிறப்பாக வெளிப்படுத்தியவர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தன்னை மக்கள் மயப்படுத்தப்பட வேண்டிய அரசியல் செயற்பாடுகளில் சிறப்பாக செயற்பட்டு, யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில் எல்லாம் தமிழ்த்தேசிய உணர்வோடு ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்காக பிரச்சாரப் பணிகளை உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மேற்கொண்டவர்.
கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தினுடைய முன்னாள் தலைவராக கிளிநொச்சி சேவைச் சந்தையின் வர்த்தக சங்கத்தின் உபதலைவராக இருந்து சமூக சேவை ஊடாக கிளிநொச்சியில் உள்ள மக்கள் மனங்களை வென்ற ஒரு மனிதராவார்.






