தோல்வி எதிரொலி… தமிழக வீரருக்கு இனி வாய்ப்பே இல்லை என தகவல்…

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால், அந்தணியில் இனி தினேஷ் கார்த்திக் மற்றும் கீதர் ஜாதவ்விற்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததன் எதிரொலியாக மிடில் ஆர்டரில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணியை கடந்த 2 ஆண்டுகளாக பிசிசிஐ சுழற்சி முறையில் வீரர்களை தேர்வு செய்து இங்கிலாந்திற்கு அனுப்பியது.

ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பின் படி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறிப்பாக அரையிறுதிப் போட்டியில் சொதப்பியதால், தினேஷ் கார்த்திக் மற்றும் கீதர் ஜாதவ் ஆகியோரை அணியிலிருந்து ஓரங்கட்டிவிட்டு, அவர்களுக்கு பதிலாக வேறு சில வீரர்களை இனி ஆட வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும், இனிமேல் தினேஷ் கார்த்திக் மற்றும் ஜாதவ் ஒரு நாள் போட்டி தொடருக்கான அணியில் இடம் பெற வாய்ப்பே இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு பல போட்டிகளில் வெற்றிக்கு முக்கிய நபராக இருந்துள்ளார், ஆனால் இங்கிலாந்து மைதானத்தில் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் அணி நிர்வாகத்திற்கு திருப்தி அளிக்காததால், வெளிநாட்டு தொடர்களிலும் சிறப்பாக விளையாடும் வீரர்களை பிசிசிஐ சல்லடை போட்டு தேடிவருகிறது.