உலகக்கோப்பை எங்களுக்கு தான்! அவுஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங்….

அவுஸ்திரேலிய அணி 6வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நடந்து வரும் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப்போட்டியில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

அடுத்த நடக்க உள்ள இரண்டாவது அரையிறுதியில், இங்கிலாந்து அணியை அவுஸ்திரேலியா எதிர்கொள்கிறது. இந்நிலையில், இங்கிலாந்தை அரையிறுதியில் வீழ்த்துவதுடன், 6வது முறையாக உலகக்கோப்பையை வெல்வோம் என்று, அந்த அணியின் பேட்டிங் ஆலோசகரும், முன்னாள் கேப்டனுமான ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உலகக்கோப்பையில் வீரர்கள் காயம் அடைவது வழக்கத்திற்கு மாறானது என்று கூற முடியாது. என்றாலும் கவாஜா, ஸ்டாய்னிஸ் அரையிறுதிக்கு முந்தைய ஆட்டத்தின் போது காயத்திற்கு உள்ளானது சற்று மாற்றத்தை ஏற்படுத்தும்.

உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டிக்குச் செல்லும்போது, இது போன்ற காயம் சிறந்ததாக இருக்காது. உலகக்கோப்பை லீக் சுற்றில் ஏற்கனவே நாங்கள் இங்கிலாந்தை வீழ்த்தியிருக்கிறோம்.

இந்த நாள் வரை நாங்கள் உலகக்கோப்பையில் தலைசிறந்த அணியாக இருக்கிறோம். கடைசி லீக்கில் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றது சிறந்தது அல்லது. அதேபோல் மோசமான விடயமும் அல்ல. அது எங்களுக்கான எச்சரிக்கையாகும்.

லீக் ஆட்டத்திற்குப் பிறகு சில நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. ஓய்வு நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி சிறந்த அணியாக உருவாகி, அரையிறுதியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இங்கிலாந்தை தோற்கடிக்க வீரர்கள் அடுத்த லெவல் வழிகளை கண்டுபிடித்துள்ளனர். நாங்கள் 6வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றுவோம்’ என தெரிவித்துள்ளார்.