செமி பைனலில் களமிறங்க வேண்டிய இந்திய அணி! சச்சின் அறிவிப்பு!

நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியில் முதல் அரையிறுதியில், நாளை மான்செஸ்டரில் நடைபெறும் போட்டியில், இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகிறது. இந்த போட்டியில் பதட்டத்தினை சரியாக கையாள்கிற அணியே வெற்றி பெரும் என இந்தியாவின் முன்னாள் வீரர் சச்சின் தெரிவித்துள்ளார்.

லீக் போட்டிகளின் முடிவில், இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, ஒன்பது போட்டிகளில் ஏழு வெற்றி, ஒரு போட்டி ரத்து, ஒரு போட்டியில் தோல்வி என 15 புள்ளிகளை பெற்றது. நியூசிலாந்து அணியோ தொடரில் முதலில் அசத்த, கடைசி மூன்று ஆட்டங்களில் மூன்று தோல்விகளை கண்டு பின்னடைவை சந்தித்து நான்காவது அணியாக அரையிறுதிக்கு வந்தது.

இந்த போட்டியை இந்திய அணி எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சச்சின் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். அதில் இந்த போட்டியில் “இறுதிவரை அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். அந்த அழுத்தங்களை யார் சிறப்பாக கையாள்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர்களாக இருப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு புதியதாக எவ்வித பரிசோதனையும் செய்ய வேண்டும் எனவும் சச்சின் தெரிவித்துள்ளார். மேலும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதி வரலாற்றில் முதல் முறையாக இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

நியூசிலாந்து அணி இதுவரை 7 அரையிறுதிகளில் விளையாடி ஒரே ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. அதுவும் கடந்த முறை நியூசிலாந்தில் நடைபெற்ற போட்டியில் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்திய அணி உலகக் கோப்பை அரையிறுதியில் 6 முறை விளையாடி இந்தியா 3 (1983, 2003, 2011 ) வெற்றி 3 (1987, 1996,2015) தோல்வி என்ற அளவில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தொடரில் இதுவரை கோஹ்லியின் இந்திய அணி தான் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஆனால் இறுதி லீக் ஆட்டங்களில் கேன் வில்லியம்சனின் அணி சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் நியூசிலாந்தை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சச்சின் தெரிவித்துள்ளார்.

அணி மாற்றங்களைச் செய்வது குறித்து பேசிய சச்சின், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை விளையாடும் வீரர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கூறியுள்ளார். தினேஷ் கார்த்திக்கை 7 வது இடத்தில் பேட்டிங் செய்ய அழைத்து போகிறார்கள் என்றால், அதற்கு ரவீந்திர ஜடேஜாவை அழைத்து செல்லலாம் என கூறியுள்ளார்.

ஐந்து பந்துவீச்சாளர்கள் இல்லாமல் ஆறாவது பந்துவீச்சு ஆப்ஷனுக்காக ஜடேஜாவை தேர்வு செய்யலாம் என சச்சின் கூறியுள்ளார். அதேபோல ஷமியை மீண்டும் அழைத்து வர வேண்டும் என சச்சின் கூறியுள்ளார்.

சச்சின் எதிர்பார்க்கும் அணியானது, ” ரோகித், ராகுல், கோலி, பாண்ட், தோனி, பாண்டியா, ஜடேஜா, புவனேஸ்வர், ஷமி, சாஹல், பும்ரா என தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார்.