பணியில் சேர்ந்த முதல் நாளே தற்கொலை செய்த மருத்துவர்!

அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்த முதல் நாளான நேற்று 26 வயது மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோக சம்பவம் மகாராஷ்ரா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் மன்யகுமார் வைத்யா (வயது 26). இவர் தனது மருத்துவ கல்வியை முடித்து பணி ஆணைக்காக காத்திருந்தார்.

அவருக்கு மகராஷ்ரா மாநிலம், நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிய கடந்த மே இரண்டாம் தேதி பணி நியமன ஆணை அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, சமீபத்தில் நாக்பூர் சென்ற மன்யகுமார் அங்குள்ள மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கியவாறு பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், பயிற்சி முடிந்து புறநோயாளிகள் பிரிவில் மருத்துவராக நேற்று அவர் தனது முதல் நாள் பணியை தொடங்குவதாக இருந்தது. ஆனால், அவர் இன்று காலை மருத்துவமனைக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக மருத்துவர்கள் மன்யகுமார் தங்கியிருந்த விடுதி அறைக்கு சென்றனர்.

அப்போது தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டு மன்யகுமார் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

இந்த சம்பவம் அவரது குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.