பாகிஸ்தானை மிக மோசமாக கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

பாகிஸ்தான் அணியின் உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு கிரிக்கெட் உலகில் பேசு பொருளாக உள்ள நிலையில், அந்நாட்டு ரசிகர்களே தங்கள் அணியை கிண்டல் செய்து வருகின்றனர்.

நடப்பு உலகக்கோப்பை தொடரின் இன்று நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில், வங்கதேச அணியை மிகப் பெரிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும்.

அவ்வாறு நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி ரன் ரேட் அடிப்படையில் நான்காவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். அதாவது 300 ஓட்டங்களுக்கு மேல் ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும்.

ஆனால், வங்கதேசம் அணி முதலில் துடுப்பாட்டம் செய்தால் அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விடும். அத்துடன் அந்த அணியின் துடுப்பாட்ட வரிசை மிகவும் வலுவாக உள்ளது. எனவே, இன்றைய போட்டியில் பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டம் செய்தால், 350 ஓட்டங்கள் எடுக்கும் பட்சத்தில், 311 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

அல்லது 400 ஓட்டங்கள் எடுத்தால், 316 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 450 ஓட்டங்கள் எடுத்தால் 322 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற வேண்டும். ஆனால் இதெல்லாம் அவ்வளவு சாத்தியமான விடயம் அல்ல.

எனவே, இதனை வைத்து தான் பாகிஸ்தான் ரசிகர்களே, தங்கள் அணி எப்படி வெற்றி பெற்றால் அரையிறுயில் நுழையும் என்று கிண்டலாக சில கணக்குகளை போட்டு வருகின்றனர்.

அவ்வாறு ரசிகர் ஒருவர், பாகிஸ்தான் முதலில் ஆடி 350 ஓட்டங்கள் எடுக்க வேண்டும். உணவு இடைவேளையில் வங்கதேச வீரர்களை கழிவறையில் வைத்து பூட்டிவிட வேண்டும். அதன் பின்னர் பாகிஸ்தான் அரையிறுயில் நுழைந்துவிடும் என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர், பாகிஸ்தான் 934 ஓட்டங்கள் எடுத்து, வங்கதேசம் 81 ஓட்டங்கள் மட்டும் எடுத்தால் அரையிறுதிக்கு போகுமா? என்று கிண்டலாக தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரசிகர் ஒருவர் இன்னும் ஒருபடி மேலே போய், பாகிஸ்தான் 1000 ஓட்டங்கள் எடுத்து, வங்கதேசத்திடம் கெஞ்சியபடி சேஸிங் செய்யாதீங்க என்று கேட்டுக்கொண்டால், பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவித்தால்.. அரையிறுதிக்கு போக முடியுமா? என கேட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் ரசிகர்களின் இந்த செயல்களினால் வெறுப்படைந்த வங்கதேச ரசிகர் ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். வங்கதேசம் 1099 ஓட்டங்கள் எடுக்கும். தமிம் இக்பால் 700, சவுமியா சர்க்கார் 300 ஓட்டங்கள் எடுப்பார்கள் எக்ஸ்ட்ராஸ் 99 கிடைக்கும். பாகிஸ்தான் 10 ஓட்டங்களில் ஆல்-அவுட் ஆகும் என தெரிவித்துள்ளார்.

இவர்களது சண்டையை பார்க்கும் போது, இன்றைய போட்டி மிகவும் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.